கட்டாய கல்விச்சட்டத்தில் இடஒதுக்கீடு : தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 25, 2022

கட்டாய கல்விச்சட்டத்தில் இடஒதுக்கீடு : தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மாணவர்களைச் சேர்க்கலாம் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஏ.கோபால், டி.சரவணன் ஆகியோர் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்களது மகன்களுக்கு மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் (ஆர்டிஇ சட்டம்) கீழ் சீட் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை இன்று விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், " ஆர்டிஇ சட்டப்படி ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய பிறகும் காலியிடம் இருந்தால் 3 கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் பிறகும் காலியிடம் இருந்தால் 6 கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் தூரக் கட்டுப்பாட்டிற்குள் மாணவர்கள் கிடைக்காவிட்டால் ஆர்டிஇ ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டாம் என்ற அர்த்தம் கிடையாது.

ஒரு கிலோ மீட்டர் தூரக்கட்டுப்பாடு தளர்த்த முடியாதது அல்ல. பள்ளிக்கு நடந்து வரும் தொலைவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேராவிட்டால் தூரக் கட்டுப்பாடு பரப்பளவை அதிகரிக்க வேண்டும். ஆர்டிஇ சட்ட ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும்.

இதை செய்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் குழந்தைகளின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் கனவை நிறைவேற்ற முடியும். மனுதாரர்களின் குழந்தைகளை உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும்: என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இந்த உத்தரவு பல ஏழைப் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.