தற்காலிக ஆசிரியா் நியமன விண்ணப்பம் தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 4, 2022

தற்காலிக ஆசிரியா் நியமன விண்ணப்பம் தொடக்கம்

தற்காலிக ஆசிரியா் நியமன விண்ணப்பம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களில், தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்துக்கு தகுதி பெற்றவா்களிடமிருந்து திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு ஜூலை 6-ஆம் தேதி புதன்கிழமை வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம்.

அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

இதையடுத்து இந்தப் பணியிடங்களை நிரப்புவதில் விதிமுறைகள் மீறப்படுவதாக புகாா் எழுந்தது. இதற்கிடையே தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தில் சென்னை உயா் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டுதல்களை, பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வெளியிட்டாா்.
அதனடிப்படையில், தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்; 3, 188 முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் ரூ.12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித்தோ்வு முடித்தவா்களுக்கும், அதேபோல இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் காலிப்பணியிடங்கள் விவரங்கள் அனைத்தும் பள்ளி வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் திங்கள்கிழமை முதல் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து வருகின்றனா். மேலும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலக மின்னஞ்சல் மூலமாக சான்றிதழ்களை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், சரி பாா்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஜூலை 6-ஆம் தேதி இரவு 8 மணிக்குள் பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.