இ.நி.ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு : சமூகநீதியும் இல்லை! திட்டமிடலும் இல்லை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 8, 2022

இ.நி.ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு : சமூகநீதியும் இல்லை! திட்டமிடலும் இல்லை!

இ.நி.ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு : சமூகநீதியும் இல்லை! திட்டமிடலும் இல்லை!

இடைநிலை ஆசிரியருக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு அப்பட்டமான சமூகநீதி மிறலோடே நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

2020-21-ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தொடக்க & பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுகளும் Staion Seniority படியே நடைபெற்றது. ஆனால், நீதிமன்றத் தலையீட்டால் நடைபெறாமல் நிறுத்தப்பட்டிருந்த தொடக்கக் கல்வித்துறையின் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மட்டும் நடப்பு நடைமுறைக்கும் மாறாக எந்தவித முறையான அரசாணை வழிகாட்டலுமின்றி Appointment Seniority படி நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அரசாணையே இல்லை என்பதால் இது தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு உட்பட்டுத்தான் நடைபெறுகிறதா என்ற ஐயமும் உள்ளது. ஆம் எனில், இதுதான் தற்போதைய திராவிட மாலில் விற்கபடும் சமூகநீதியா என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய சமூக அநீதியைத் தட்டிக் கேட்டு நிறுத்த தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த எந்தவொரு சங்கமும் முன்வரவேயில்லை. சிலர் பெயருக்குக் கடிதம் மட்டும் அளித்து அமைதியாகிவிட்டனர். அநேகர் அடுத்து ஏதேனும் போராட்டம் நடத்தினால் ஆள்சேர்க்க புதிதாக ஒரு கோரிக்கை கிடைத்துவிட்டது என்று மனமகிழ்ந்துள்ளதாகவே உணர வேண்டியுள்ளது. ஏனெனில், ஒரே கலந்தாய்வில் மாவட்டம் மாறும் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முற்றில் தவறான புதிய முறை வலிந்து திணிக்கப்படுகையில் அதைக்கூட எதிர்த்துக் குரல்கொடுக்காது கடப்போரை வேறு என்னவென்பது.

இந்தக்கொடுமை ஒருபுறமென்றால் கலந்தாய்வு நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படைத் திட்டமிடலே இல்லை என்பது அதனினும் கொடுமையான விடயமாகவே உள்ளது.

7-ஆம் தேதி இடைநிலை ஆசிரியருக்கும் 8-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியருக்கும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்பது பள்ளிக் கல்வித்துறையின் திட்டம். இதில் கடந்த காலங்கள் போல் விடிவிடிய நடத்தாது இரவு 7 மணி வரை மட்டும் நடத்தப்படும். அன்றைக்குள் முடியவில்லை எனில் மறுநாள் தொடரும் என்பது வரவேற்கத்தக்க நடைமுறை.

காலை 10:00 முதல் இரவு 7:00 மணிவரை (முதல்நாள் 540 நிமிடங்கள்; அடுத்த நாள் முதல் 600 நிமிடங்கள்) இணைய இணைப்புச் சிக்கலின்றி ஒரு நிமிடத்திற்கு ஒரு ஆசிரியருக்கு மாறுதல் பணியை முடித்தால்கூட ஒரு நாளில் 540 ஆசிரியர்களுக்கு மட்டுமே முடிக்க முடியும். விண்ணப்பித்துள்ளோர் சுமார் 4300 பேர். அப்டியானால் இவர்கள் அனைவரும் கலந்தாய்வில் கணினி முன்பு அமர வேண்டுமானால் 8 நாள்கள் ஆகும். முதல் நபர் திருச்சி கலந்தாய்வு மையத்தில் உள்ள ஒரு கணினியில் அமர்ந்து தனக்கான இடத்தைத் தெரிவு செய்ய, அடுத்த நபர் திருவண்ணாமலையில் அமர்ந்து தனக்கான இடத்தைத் தெரிவு செய்கிறார் என்றால் இதற்குத் தோராயமாக குறைந்தது 2-5 நிமிடங்கள் வரை ஆகலாம். இதுவே, ஒருவர் வரவில்லை என்றாலோ / கலந்தாய்வில் கலந்துகொண்டு புதிய இடத்தைத் தேர்வு செய்ய விரும்பவில்லை என்று பதிலளித்தாலோ அதைக் கணினியில் பதிவிட குறைந்தது 30 நொடிகள் முதல் 50 நொடிகள் வரை ஆகக்கூடும்.

மொத்தம் காட்டப்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் 4755. அதில் உறுதியாக நிரப்பப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள குறைந்தபட்ச காலிப்பணியிட எண்ணிக்கை 732. இந்த இடங்களை நிரப்ப குறைந்தது 1462 - 3660 நிமிடங்கள் ஆகக்கூடும். அதாவது எப்படியும் நிரப்பப்படக்கூடிய பணியிடங்களுக்கான கலந்தாய்வை நடத்துவது என்றால் குறைந்தது 3 - 6 நாள்கள் வரை ஆகக்கூடும்.

மொத்தத்தில் குறைந்தபட்சம் நிரம்பக்கூடிய 732 பணியிடங்களை நிரப்பவே சராசரியாக 4.5 நாள்கள் ஆகக்கூடும். தற்போதுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையோ / மாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கையோ சுமார் 4000 எனும் போது எத்தனை நாள்கள் நடக்கும் என்பது முடிந்தால்தான் தெரியும். அதன் பின்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் தொடங்கும்.

கடந்த கால இணையவழி மாறுதல் கலந்தாய்வின் அனுபவத்தையும் துய்க்காது, தற்போது விண்ணப்பித்துள்ளோருக்கான கால அளவுக் கணக்கீட்டையும் மேற்கொள்ளாது எவ்விதத் திட்டமிடலுமின்றி 7-ஆம் தேதி இடைநிலை ஆசிரியருக்கும் 8-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியருக்கும் மாறுதல் கலந்தாய்வு என அறிவித்திருந்தது பள்ளிக் கல்வித்துறை. இந்நிலையில் நேற்று (7.7.22) 10:00 மணிக்குத் தொடங்கியிருக்க வேண்டிய கலந்தாய்வு மாலை 4:00 மணிக்குத் தொடங்கி சராசரியாக 2 நிமிடங்களுக்கு 1 ஆசிரியர் வீதம் முதல்நாள் முடிவில் 94 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டாம் நாளான இன்று அதிகபட்சமாக 394-ஆம் எண் ஆசிரியர் வரை கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

கலந்தாய்வில் ஒரு நாளைக்கு எத்தனை நபர்களைப் பங்கேற்க வைக்க இயலும் என்ற திட்டமிடல் இல்லாததால் சுமார் 4000 ஆசிரியர்கள் கடந்த 2 நாள்களாகக் கலந்தாய்வு மையங்களில் காக்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலம் முழுக்க அவர்களது வகுப்பறை நிகழ்வுகளும் கடந்த 2 நாள்களாக முடங்கியுள்ளது. மேலும், கலந்தாய்வு மையங்களில் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் இருக்கவைக்கப்பட்டுள்ளதால் வட்டார அளவிலான அவர்களின் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநில அளவில் நாளொன்றிற்கு 250 - 400 ஆசிரியர்களை மட்டும் கலந்தாய்விற்கு அழைக்கலாம். அந்த எண்ணிக்கையில் அடங்கும் ஆசிரியர்கள் சார்ந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்களில் ஒருவரை மட்டும் கலந்தாய்வு மையத்தில் இருக்க வைக்கலாம். ஆனால் இதனையெல்லாம் பள்ளிக் கல்வித்துறை கவனத்தில் கொள்ளுமா என்பது தெரியவில்லை.

இதுவரை திட்டமிடலின்றி செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நிகழ்வுகளை எதிர்வரும் நாள்களிலாவது முன்னனுபவத்தின் படி கணிதப்பூர்வமாகத் திட்டமிட்டு நடத்த வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.