தற்காலிக ஆசிரியர் நியமனத்தைக் கைவிட, அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 3, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனத்தைக் கைவிட, அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்!

தற்காலிக ஆசிரியர் நியமனத்தைக் கைவிட வேண்டும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று (03.07.2022) குற்றாலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். தென்காசி மாவட்டச்செயலாளர் க.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் ச.மயில் சமர்ப்பித்தார். சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை மாநிலப்பொருளாளர் ஜீ.மத்தேயு அளித்தார்.

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டு முடிவுகள் குறித்து பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் விளக்கிப் பேசினார். சங்க கிளை அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் எடுத்துரைத்தார்.

ஆசிரியர் கேடயம் இயக்க இதழ் புரவரலர் சேர்ப்புத் திட்டம் தொடர்பாக மாநிலத் துணைத்தலைவர்கள் பெ.அலோசியஸ் துரைராஜ், மா.ஆரோக்கியராஜ், மாநிலச்செயலாளர். தே.முருகன் ஆகியோர் பேசினர். பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறியதாவது.

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு தமிழக அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், தேசியக்கல்விக் அரசு கொள்கை 2020ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு 01.01.2022 முதல் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 3% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்,

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் முடிவைத் தமிழக அரசு திரும்பப்பெற்று உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும், காலங்காலமாக தமிழக அரசு ஊழியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையைத் தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து உத்திரவிட்டுள்ளதைத் திரும்ப பெற வேண்டும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் உயர்கல்விக்குப் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் முடிவைத் தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்,

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் முன்பு வழங்கப்பட்டது போல் பாகுபாடின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், ஆசிரியர்களின் இன்றைய பணிச்சுழலைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மூன்று கட்ட தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 21.07.2022 அன்று மாநிலம் முழுதும் வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும், 13.08.2022 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்திடவும், முதல் பருவ விடுமுறையில் சென்னையில் மாநில அளவிலான போராட்டத்தை நடத்திடவும் மாநிலப் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் உயர்கல்வி நிறுவனங்களில் தனி இட ஒதுக்கீடு, அரசுப் பணிகளில் தனி இட ஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் வழங்கிட வலியுறுத்தி மாநில அளவிலான "அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்புக் கருத்தரங்கம்" ஒன்றை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை அல்லது திருச்சியில் நடத்திடவும் மாநிலப் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுதுமிருந்து மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்டத் தலைவர் செ.ரமேஷ், மாவட்டச் செயலாளர்க.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர் த.மணிமேகலை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.ராஜ்குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.