`TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு NO; இல்லம் தேடி கல்வி பணியாளிகளுக்கு YES’- தஞ்சையில் அவலம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 4, 2022

`TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு NO; இல்லம் தேடி கல்வி பணியாளிகளுக்கு YES’- தஞ்சையில் அவலம்

தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வழங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் இடங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே மேலாண்மை குழு சார்பில் தற்காலிகமாக நிரப்பி கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர். இதை எடுத்து காலியாக உள்ள இடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கும் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார். அதில் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக நிரந்தர ஆசிரியர் பணியாளர்கள் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே மாவட்டங்களில் உள்ள அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தஞ்சையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் வாங்க குவிந்தனர். ஆனால் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கவில்லை. மாறாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த கார்த்திக் என்பவர் கூறும்போது, `நான் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தேன். எனக்கு இதுவரை பணி வழங்கவில்லை. என்னை போல் வேலைக்காக தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானோர் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று முதன்மை கல்வி அலுவலகத்திலும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பம் வழங்கவில்லை. இது குறித்து கேட்டால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், உங்களுக்கு விண்ணப்பம் கிடையாது என அலட்சியமாக கூறுகின்றனர்.

ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கவில்லையே என வேதனையில் உள்ளோம். தற்போது தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கும் விண்ணப்பம் வழங்காமல் நிராகரிப்பது மேலும் வேதனை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக எங்களுக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும். மேலும் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.