காமராஜர் திறந்து வைத்த 60 ஆண்டு பழமையான ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தற்போதைய நிலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 30, 2022

காமராஜர் திறந்து வைத்த 60 ஆண்டு பழமையான ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தற்போதைய நிலை

நாமகிரிப்பேட்டை அருகே முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் திறந்து வைத்த பெருமைக்குரிய தொடக்கப்பள்ளி, சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது. தமிழகத்தில் குக்கிராமங்களில் கூட பள்ளிகளை உருவாக்கி அறிவுக்கண்ணை திறக்க வழிவகுத்தவர் முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர்.

இதனால்தான் அவரது பிறந்தநாள் ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் சிந்தனையில் உதித்து அவரால் திறந்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகள், இன்றளவும் கிராமங்களில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தவகையில் பெருமைக்குரியது நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நவல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நா.காட்டூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி. 1959ம் வருடம் சமுதாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அப்போதைய துணை கலெக்டர் கருப்பன் இப்பள்ளிக்கு பூமி பூஜை செய்து, அன்று முதலே அரசாங்கத்தின் நிதி மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளி கட்டடம் உருவாக்கப்பட்டது. அப்போதைய சர்க்காரின் நிதி ரூ.4000, பஞ்சாயத்து போர்டு நிதி ரூ.2,870, பொதுமக்கள் நிதி ரூ.1330 என்று மொத்தம் ரூ.8000 மதிப்பீட்டில் பள்ளி உருவானது.

அப்போதைய சேலம் மாவட்ட கலெக்டர் ஆம்பூர் தலைமையில் பணிகள் தொடங்கப்பட்டது. 1960ம் ஆண்டு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. மூன்று வகுப்பறைகள் மற்றும் முன்புறம் வராண்டா அமைக்கப்பட்டது. இந்த பள்ளியின் மேற்கூரையில் சீமை ஓடுகள் வேயப்பட்டு கட்டிடங்கள் முழுமை பெற்றது. இப்பள்ளிக்கான திறப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது.

சுற்றுப்புற கிராம மக்கள் புடைசூழ, அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் கலந்து கொண்டு, பள்ளியை திறந்து வைத்தார். பள்ளியின் தொடக்க நாளிலேயே 50 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். நா.காட்டூர் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய, விவசாய பெருமக்களின் குழந்தைகளின் அறிவு வளர்க்கும் மையமாக இந்தபள்ளி உருவெடுத்தது. இங்கு பயின்ற மாணவ, மாணவியர் பலர் டாக்டர்களாகவும், ஆசிரியர்களாகவும், இன்ஜினியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் உருவெடுத்துள்ளனர். இந்தவகையில் 60 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஆரம்பகல்விக்கு இந்தபள்ளி அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த பள்ளி, கடந்த 10 ஆண்டுளாக பாராமுகத்தில் நிற்கிறது. ஏழை, எளிய பெற்றோரின் தனியார் பள்ளி மோகம், இந்த பள்ளியையும் பாதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது 1முதல் 5வரையுள்ள வகுப்புகளில் ஒட்டு மொத்தமாக 32 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும், 2 ஆசிரியர்களும் பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி தரம் உயர்த்தப்படாத அதே நேரத்தில் பள்ளியின் கட்டுமானமும் சிதிலமடைந்து வருகிறது. மழைக்காலத்தில் உடைந்த ஓடுகளுக்கு மத்தியில் ஜோராகப்பெய்யும் மழை, வகுப்பறைகளை குளமாக்கி வருகிறது. இது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால் பள்ளி முழுவதும் மழை நீர் ஒழுகியது. இதனை பெற்றோர் ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் வெளியிட அது தற்போது வைரலாகியுள்ளது. இது குறித்து பெற்றோர் கூறுகையில், ‘‘தற்போது கிராமங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் அரசின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது. லகிராமங்களில் தனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசுப்பள்ளிகளை தேடிச் சென்று, பெற்றோர் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதற்கு அந்த பள்ளிகளின் கட்டமைப்பும், அடிப்படை வசதிகளும் சிறப்பாக இருப்பதே முக்கிய காரணம். அதே நேரத்தில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் திறந்து வைத்த இந்த பள்ளி, மழை நீர் புகும் அளவுக்கு இருப்பது வேதனைக்குரியது.

இது போன்ற சில காரணங்களால் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த பள்ளியை சீரமைத்து மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளியில் என்னென்ன குறைகள் உள்ளது? கட்டிடங்களின் தன்மை எப்படி உள்ளது? என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ற மேம்பாட்டு பணிகளை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.