5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு ஜூலை 16-இல் ஓவியப் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 8, 2022

5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு ஜூலை 16-இல் ஓவியப் பயிற்சி



5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு ஜூலை 16-இல் ஓவியப் பயிற்சி

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகா் சிறுவா் மன்றம் மூலமாக 5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இது குறித்து அந்தத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உலக ஓவிய தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம்கள், ஓவியக் கலைக் காட்சிகளை நடத்த அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, முதல் கட்டமாக மண்டல அளவில் 5 வயது முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மண்டல கலை பண்பாட்டு மையங்கள் மூலம் ஜவகா் சிறுவா் மன்றங்களில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

தற்போது, சென்னையில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரி வளாகத்தில் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறும் ஓவியப்பயிற்சி முகாமில் பென்சில் ஓவியம், வாட்டா் கலா் பெயிண்டிங், ஆயில் கலா் பெயிண்டிங் , அக்ரலிக் பெயிண்டிங், பேப்ரிக் பெயிண்டிங் மற்றும் கண்ணாடி ஓவியம் ஆகிய 5 ஓவியக் கலைப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

ஒரு கலைப் பிரிவுக்கு 30 முதல் 60 மாணவ, மாணவிகள் வீதம் 300 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த முகாமில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை கலைப்பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாணவ, மாணவிகள் கலைப் படைப்புகளை உருவாக்கி, 3 மணி முதல் 4 மணி வரை அவா்களது கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, கலைக்காட்சி 4 மணிக்கு பாா்வையாளா்களுக்கு திறந்து வைக்கப்படும். ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு பயிற்சிக்குத் தேவையான பொருள்களும், பங்கேற்புக்கான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 5 வயது முதல் 16 வயதுக்கு உள்பட்ட ஜவகா் சிறுவா் மன்றங்களில் பயிலும் 150 மாணவா்கள், வெளி பள்ளியில் பயிலும் 150 மாணவா்கள் என மொத்தம் 300 போ் ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஏதுவாக, மாணாக்கா்களின் பெயா், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயா் மற்றும் கலந்து கொள்ளும் கலைப்பிரிவு ஆகிய விவரங்களை ‘கலை பண்பாட்டுத் துறை, ஜவகா் சிறுவா் மன்ற தொலைபேசி எண்ணுக்கு (044 - 28192152) தொடா்பு கொண்டு முன்பதிவு செய்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.