'தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணி நியமனம் செய்க' - விஜயகாந்த் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 28, 2022

'தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணி நியமனம் செய்க' - விஜயகாந்த்

ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட்டுவிட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப் பள்ளி முதல் மேல் நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

2013, 2014, 2017, 2019ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்.

இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்வித்தரம் காப்பதற்கான வாய்ப்பாக இது அமையும். ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும்." என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.