தற்காலிக ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைப்பு; சிறப்பு பணி அதிகாரி உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 30, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைப்பு; சிறப்பு பணி அதிகாரி உத்தரவு

உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில், முன்னுரிமை விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர் நியமனங்களை செய்யக் கூடாது என்று இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 4898 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களை நியமிக்கும் வரை, இடைக்கால ஆசிரியர்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது. இது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரசின் அறிவிப்புக்கு பிறகு, இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு பணி அலுவலர் வழிகாட்டு நெறிமுறைகளில், இடைக்கால ஆசிரியர்களை நியமிக்கும் போது பள்ளி மேலாண்மைக் குழு வழியாகவும், ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் மேற்கண்ட விதிகளை கடைபிடிக்காமல் தங்களின் விருப்பப்படி ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு பல புகார்கள் வருகின்றன. இதையடுத்து, அந்த நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் தெரிவித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எப்படி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது. தெளிவுரைகள் வந்த பிறகே உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் இன்று பணிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.