ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல காலம்.. பென்சன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 3, 2022

ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல காலம்.. பென்சன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

பென்சன் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோவா மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு 60 வயதுக்கு பதிலாக 58 வயதில் பணி ஓய்வு வழங்கியுள்ளது. இதையடுத்து, மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில், மனுதாரர்களான அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான ஊதியம் வழங்கப்பட தேவையில்லை எனவும், பென்சன் நிலுவைத் தொகையும் வழங்கப்பட தேவையில்லை எனவும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.


மேலும், நீதிமன்றத்தை நாடுவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே பென்சன் வழங்காமல் தவிர்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு 60 வயது முதல் திருத்தப்பட்ட விகிதத்தில் பென்சனும், முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான பென்சன் நிலுவைத் தொகையும் நான்கு வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரசு ஊழியர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு பென்சன் நிலுவைத் தொகை வழங்கக்கூடாது என்பதும், திருத்தப்பட்ட விகிதத்தில் பென்சன் வழங்கக்கூடாது என்பதும் நியாயமற்றது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வாயிலாக கோவா அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களில் இதே பிரச்சினையை சந்திக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.