பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 12, 2022

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை

குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கடந்த 09-05-2022, திங்கட்கிழமை அன்று தடம் மாறும் பள்ளிக் குழந்தைகளைத் தண்டிப்பது குறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பக்கம் நின்று பேசுவதாகக் கருதி, எப்போதுமே பாதிக்கப்படும் மாணவர்களுக்கு எதிராக் கல்வித்துறை நடப்பதற்கு ஏதுவான அறிவிப்பு ஒன்றைச் சட்டப்பேரவையில் வழங்கியது வருத்தத்தை அளிக்கிறது. தாம் பேசுவது பள்ளிக் கல்வி அமைப்பில் ஏதிலிகளாய் உள்ள எப்போதும் நட்புறவுடன் இருக்க வேண்டிய ஆசிரியர் மாணவர் ஆகிய இருவரையும் மேலும் எதிரெதிர்ப் புள்ளியில் நிறுத்தும் என்பதை நீவிர் ஆராயாமல் பேசியமை மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

முறைகேடான நடத்தையில் ஈடுபடும் மாணாக்கரின் (ஆண், பெண், பிறர்) நடத்தைக் கோளாறுகளை ஆராய, சீர் செய்ய குழுக்களை அமைக்கவும் ஆசிரியர்களுக்கு உளவியல் முதலுதவி, உளவியல் தொண்டாற்றுதல் முதலிய பயிற்சிகள் அளிக்கவும் அறிவிப்பு வழங்கவேண்டிய அமைச்சர், ஊரடங்கு காலமும் தேர்வு நெருக்கடியும் பள்ளிக்கல்வித்துறையின் திடீர் அறிவிப்புகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஏற்படுத்தி இருக்கும் அழுத்தத்தைக் கணக்கில் கொள்ளாமல் மாற்றுச் சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ் பற்றியெல்லாம் அறிவிப்பது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கிறது. இனிவரும் காலங்களில் குழந்தைகளின் நலன் பாதிக்கும் வகையிலான எவ்வித அறிவிப்பும் வாரா எனும் எண்ணத்தில் குழந்தை நேய பள்ளிகள் கூட்டமைப்பு தன் கடும் கண்டனத்தை முன்வைக்கிறது. இந்த அறிவிப்பு குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிரானதாய் அமையும் என்ற காரணத்தால் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் தமது அறிவிப்பை திரும்பப் பெறவேண்டுமெனக் குழந்தை நேயப் பள்ளிகளுக்கான கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

விரிவான அறிக்கை விரைவில் வெளியிடுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.