மாணவர்களை மிரட்ட கல்வி அமைச்சர் எடுத்தார் பிரம்பு: ஆசிரியர்கள் வரவேற்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 10, 2022

மாணவர்களை மிரட்ட கல்வி அமைச்சர் எடுத்தார் பிரம்பு: ஆசிரியர்கள் வரவேற்பு!

சமீபகாலமாக மாணவர்களின் வன்முறை செயல்பாடுகள் ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனவேதனையை உருவாக்கியுள்ளது. பல ஆசிரியர்கள் மாணவர்களை எதிர்கொள்ளவே அச்சம்படும் நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள், ஆசிரியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ தொல்லை கொடுக்கும் மாணவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளி மாற்று சான்றிதழில் அதன் காரணங்களை குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்பதே அந்த அறிவிப்பு. மொபைல் போன் பள்ளிக்கு கொண்டு வர விதிக்கப்பட்டுள்ள தடை, போனஸ் அறிவிப்பு! இது குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம்... வேல்ராஜ், சுந்தராபுரம் அரசுப்பள்ளி:

அரசின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. சில அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தாமல் நின்று போகும். அதுபோன்று அல்லாமல், இதனை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். ஒழுங்கீன செயல், பள்ளி மாற்றுச்சான்றிதழில் குறிப்பிடப்படும் என்பது, வன்முறை மாணவர்களுக்கு கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்தும்.

அருளானந்தம், தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி:

மிகவும் வரவேற்கத்தக்க அறிவிப்பு. மாணவர்களை எங்கள் குழந்தைகளாகவே பாவிக்கிறோம். ஆனால், பல மாணவர்கள் ஆசிரியர்களை ஜோக்கர்களாக நடத்துகின்றனர். ஆசிரியர்களை கிண்டல் செய்வது, திட்டுவது, அடிக்க கை ஓங்குவது ஆகிய செயல்கள், அவர்களை ஹீரோவாக காட்டும் என தவறான எண்ணுகின்றனர். இந்த அறிவிப்பு அவர்களிடம் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

சரவணக்குமார், அரசு உயர்நிலைப்பள்ளி செல்லப்பம்பம்பாளையம், எஸ்.எஸ்.குளம்:

நீதிபோதனை வகுப்புகளுக்கு பின், பாடங்கள் துவங்கும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. போலீஸ் லத்தி என்றாலே ஒரு வித பயம் உண்டு. அதே பயம் ஆசிரியர்களின் பிரம்புக்கும் இருந்தது. தற்போது, ஆசிரியர்களின் மீது இருந்த மரியாதை காணாமல் போய், கீழ் நிலையில் செல்லும் இச்சூழலில், இதுபோன்ற அறிவிப்பு நல்லது. டி.சி.,யில் ஒழுங்கீன நடவடிக்கையை பதிவு செய்வது என்றாலே தப்பு செய்யக்கூடாது என்ற அச்சம் ஏற்படும். தவறு செய்யாத மாணவர்கள் இதில் பாதிக்கப்படக்கூடாது; பள்ளி ஆசிரியர்கள் குழுவின் முடிவின் அடிப்படையில் மட்டுமே, மாற்றுச்சான்றிதழில் குறிப்புகள் வரவேண்டும். சவிதா, மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி:

நம் சொந்த பிள்ளைகள் தவறு செய்தால் அடிப்போம்; கண்டிப்போம். ஆனால், பள்ளியில் பிள்ளைகளை கண்டிக்க முடியவில்லை. கண் முன்னே பல பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்வதை பார்கிறோம். பல பெற்றோர் பிள்ளைகளை கண்முடித்தனமாக நம்பிவிடுகின்றனர்; நாங்கள் தவறுகளை சுட்டிக்காட்டியும் பலனில்லை. தற்போதைய அறிவிப்பு, குறைந்தபட்சம் ஒரு வித அச்ச உணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும்.

சித்ராதேவி, பட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி:

பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வருவது, தற்போது சாதாரணமாகிவிட்டது. மொபைல்போன், சமூகவலைதள ஈர்ப்பே பல மாணவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்கிறது. ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், மாணவர்களிடம் கொடுத்துள்ள மொபைல் போன்களை, பெற்றோர் கட்டாயம் திரும்ப பெற வேண்டும்.

உஷா, தனியார் பள்ளி:

தனியார் பள்ளிகளில் தற்போதும் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி, அதில் வீட்டு பாடங்களை பகிர்கின்றனர். தகவல்கள் எதுவானாலும், பெற்றோரின் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். வீட்டுப்பாடம், பிற முக்கிய குறிப்புகளை டைரியில் பழையபடி எழுதி அனுப்பும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். வண்டி ஓட்ட ஒரு வயது இருப்பது போல், மொபைல் பயன்படுத்தவும் ஒரு வயது நிர்ணயிப்பது அவசியம். பள்ளிகளில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு தடை என்பது மகிழ்ச்சி தருகிறது. இவ்வாறு, கல்வி அமைச்சரின் அறிவிப்புகளை ஆசிரியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். கண்டமேனிக்கு தலைமுடி..

பள்ளி சீருடை தைக்க ஒரு சிஸ்டம் வேண்டும். பல மாணவர்கள் குதிங்கால் வரை தைத்துக்கொண்டும், கைகள், காதுகளில் பெரிய வளையங்களை அணிந்து கொண்டும், சிகை அலங்காரத்தை இஷ்டப்படி வைத்துக் கொண்டும் பள்ளிக்கு வருகின்றனர். ஒழுக்கத்தை பள்ளி சீருடை, முடி திருத்தம் செய்வதில் இருந்து துவக்க, பள்ளிக்கல்வி அமைச்சருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.