அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் துவக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 9, 2022

அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் துவக்கம்

நிதியமைச்சர் பேச்சுக்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்: போராட்டமும் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏழு லட்சம் பேருக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது சாத்தியமில்லை என்ற நிதி அமைச்சர் தியாகராஜன் பேச்சுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் போராட்டம் அறிவித்துள்ளன.சிவகங்கையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர். இளங்கோவன்: தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து 15 ஆண்டுகளாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். 2016 தேர்தலில் அ.தி.மு.க., அரசு ஊழியர்களை ஏமாற்றி வல்லுநர் குழுவை அமைத்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவதாக அறிவித்தார். தமிழகத்தில் 7 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்காமல், சி.பி.எஸ்., திட்டம் ரத்து வாய்ப்பில்லை என நிதி அமைச்சர் சட்டசபையில் பேசியதை கண்டிக்கிறோம்.கொரோனா காலத்தில் ரத்து செய்த சரண்டர், உயர்கல்வி ஊக்கத்தொகை, அகவிலைப்படி உயர்வு வழங்காமல் அந்நிதியை திட்டப்பணிகளில் போட்டு கமிஷன் பார்க்கும் மாநில அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிக்கப்படும் என்றார்.பிடித்த தொகை எங்கே தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.சங்கர்: சட்டசபையில் முதலமைச்சரின் கருத்துக்கு முரண்பாடாக நிதி அமைச்சர் பேசி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்துடன் ஒப்பிட்டு தவறான புள்ளிவிபரத்தை நிதி அமைச்சர் தெரிவிக்கிறார். அங்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முறையாக பராமரித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அப்படி செய்யவில்லை. தமிழக அரசு இன்னும் தேசிய ஓய்வூதியம் ஒழுங்குமுறை கமிஷனில் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) -இணையவில்லை. ஆனால் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை எங்கே வைத்துள்ளீர்கள். நிதி அமைச்சரின் பேச்சை கண்டிக்கிறோம் என்றார்.தேர்தல் அறிக்கையில் ஏன் தெரிவிக்க வேண்டும்தேனியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில்: சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தன் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் இதை அறிவித்தார். ஆனால் சட்டசபையில் நிதியமைச்சர் தியாகராஜன், 'பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர இயலாது,' என பேசியிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானில் தன் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின்படி தேசிய ஒழுங்குமுறை ஆணையத்தில் செலுத்திய தொகை தர மறுத்துவிட்டதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை 17 ஆண்டுகளாக தன் வசமே வைத்துள்ள தமிழ்நாட்டை ஒப்பிட்டு பேசுவது ஏமாற்றும் செயல். பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என்றால் தேர்தல் அறிக்கையில் ஏன் தெரிவிக்க வேண்டும். நிதியமைச்சர் பேச்சை கண்டித்து இன்று (மே 10) அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.நிதியமைச்சருக்கு கருப்புகொடிசிவகங்கையில் தமிழ்நாடு உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார். மறுநாளே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சாத்தியக்கூறு இல்லை என நிதி அமைச்சர் பேசுகிறார். ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை பி.எப்.ஆர்.டி.ஏ., திருப்பி தரமாட்டார்கள் என்றார். ஆனால் தமிழக ஆசிரியர், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிதியை பி.எப்.ஆர்.டி.ஏ.,விடம் அரசு இதுவரை செலுத்தவில்லை. நிதி அமைச்சரின் பேச்சு மூலம் தி.மு.க., அரசின் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் அவருக்கு எள் அளவும் இல்லை. எனவே நிதி அமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆசிரியர்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டுவர். மே 11 ல் சென்னையில் நடக்கும் ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார். மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், மாவட்ட செயலாளர் முத்துச்சாமி உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.