பொது நுழைவு தேர்வு ஒன்றிய அரசுக்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு: பேரவையில் உறுப்பினர்கள் ஆவேச பேச்சு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 12, 2022

பொது நுழைவு தேர்வு ஒன்றிய அரசுக்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு: பேரவையில் உறுப்பினர்கள் ஆவேச பேச்சு

இளங்கலைப் படிப்புகளுக்கு-பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பேசியதாவது:

கே.பிஅன்பழகன்(அதிமுக): மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், 2023ம் கல்வியாண்டில் இருந்து, மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கு நுழைவு தேர்வு, நடத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை முளையிலே கிள்ளி ஏறிய வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு. இதனை தடுக்கும் வகையில், இதில் காலம் தாழ்த்தாமல் நுழைவு தேர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும். இதனை திரும்ப பெற தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுக்க வேண்டும். செல்வபெருந்தகை(காங்கிரஸ்):

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்க ஒன்றிய அரசு தொடர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்களின் சித்து விளையாட்டுக்களை விளையாடி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாணவர்கள் கல்லூரி வாயிலும் கால் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஜி.கே.மணி(பாமக): ஒட்டுமொத்த தமிழகத்தில் வாழக்கூடிய ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கல்வியினை காக்கின்ற ஒரு தீர்மானமாக பார்க்கிறோம். இது நீட்டின் மறுவடிவம். நீட் தேர்வு மருத்துவ கல்வியில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிறது. அதே சூழ்நிலையில் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் இளங்கலை படிப்பதற்கு இது ஒரு முட்டுக்கட்டை. இது அடித்தட்டு மக்களுக்கு தடையாக இருக்கிறது. இது கல்வி உரிமையை பாதிக்கும் செயல். இது தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயலாகவும் பார்க்கிறோம்.நீட்,கியூட் அவுட் என்பதை வலியுறுத்தி தனித்தீர்மனத்தை வரவேற்கிறோம்.

சதன் திருமலை குமார்(மதிமுக): நீட் என்ற நுழைவு தேர்வை கொண்டு வந்த ஒன்றிய அரசு புதிதாக கியூட்டை கொண்டு வந்திருப்பது நமது மாணவ செல்வங்களை பாதிப்பை ஏற்படுதக்கூடியதாக அமையும். முதல்வர் தீர்மானத்தில் சொன்னது போல் தனியார் பயிற்சி நிலையங்களை ஊக்குவிப்பது போல இது இருக்கிறது. முளையிலயே கிள்ளி ஏறிவதற்கு முதல்வர் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும், அதுவும் கடை கோடியில் கிராமத்தில் வாழ்கின்ற எழை, எளிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக சமூக நீதியை பாதுகாப்பதற்காக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை மதிமுக வரவேற்கிறது, வாழ்த்துகிறது.

ராமச்சந்திரன்( இந்திய கம்யூனிஸ்ட்):

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பை, கல்வி கனவை ஒன்றிய அரசு எப்படி சிதைத்ததோ? அதே போல பல்கலைக்கழகங்களுக்கு நுழைவு தேர்வு என்பது கிராமப்புற ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுடைய உயர்கல்வி கனவை சிதைக்கின்ற செயல். சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் செயல். இன்றைக்கு மாநில உரிமைக்காக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் குரல் எழுப்பாத நிலையில் நம்முடைய முதல்வரின் குரல் சமூக நீதியையும், மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் உள்ளது.

சின்னத்துரை(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):

இத்தகைய முயற்சிகளை, மோசமான தலையீடுகளை ஒன்றிய அரசு முயற்சிக்கும் போது, இந்தியாவிற்கே முன் உதாரணமாக, முன்மாதிரியாக நமது சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது மிக சிறப்பாகும். இந்த தீர்மானத்தை முழு மனதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதரிக்கிறோம். சிந்தனை செல்வன்(விசிக):

தீர்மானத்தை விசிக 100 விழுக்காடு வரவேற்கிறது. முதல்வர் மாநிலத்திற்கான ஒரு கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாநிலத்திற்கான பங்கை கேட்டு பெறுகின்ற முயற்சிகளை தமிழக முதல்வர் முன்னெடுத்து இருக்கிறார்.

ஜவாஹிருல்லா(மனித நேய மக்கள் கட்சி):

மாநிலங்களின் உரிமைகளின் மீது ஒன்றிய அரசு துள்ளிய தாக்குதலை நடத்தி வருகிறது. அதில் மிக முக்கியமாக கல்வித்துறையில் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை மையமாக வைத்து அந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. என்ன காரணம் என்றால், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள், கிராமப்புற மக்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தேர்ச்சி என்பது அதிகமாக உள்ளது.

அனைத்து மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்கு ஆக்கப்பூர்வமாக செய்து வருகிறார். நீட்டையும் ஒழிக்க வேண்டும். கியூட்டையும் ஒழிக்க வேண்டும். அதற்காக அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இ.ஆர்.ஈஸ்வரன்( கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி):

ஒரு பண்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், கல்வி முறையின் மீது முதலில் தாக்குதல் நடத்த வேண்டும். முதல்வர் இந்த நுழைவு தேர்வு என்ற விஷயத்தில் கடுமையாக எதிர்ப்பை காட்டி கொண்டிருக்கிறார். அந்த வழியில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். இதனை மனதார, நெஞ்சார வாழ்த்துகின்றோம்.

வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி):

நீட்டை கொண்டு வந்து எப்படி நம்முடைய மாணவ செல்வங்களை உயர்கல்வியான மருத்துவ கல்வி படிக்க தடை கொண்டு வந்தார்களோ? அது போன்று தான் சியூஇடி என்று சொல்லப்படுகின்ற கியூட். தமிழக முதல்வர் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அரசினர் தீர்மானம் கொண்டு வந்து, இதை எதிர்த்து இருப்பதை மனதார வரவேற்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.