தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 26.02.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 26, 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 26.02.2022

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்காலம் முடிந்தபின் அவர்களது ஜீவாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக 1965 முதல் அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாதம் ரூ20 என்று தொடங்கப்பட்ட ஓய்வூதியம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல்வேறு போராட்ட பின்னணியை தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த ஓய்வூதியம் 2004 முதல் நிறுத்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின்படி இதுவரை எவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

01.04.2004 முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அடுத்தநாளே நிர்கதியாகி தனித்து விடப்படுகின்றனர். இந்த திட்டம் ஆசிரியர், அரசு ஊழியர் நலன் மற்றும் அரசின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகவே உள்ளது. எனவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த கோரிக்கையினை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துள்ளன. இதனை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. அரசியல் கட்சிகள் கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்ட நிலையில் ஆட்சிக்கு வரும்போது செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவோம் என்று தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தெரிவித்திருந்தீர்கள்.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதை தங்களது அடையாளமாக கொண்டு செயல்பட்டுவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் வாக்குறுதி மீது கொண்ட நம்பிக்கையால், அவரது தேர்தல் அறிக்கையினை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அகமகிழ்ந்து வரவேற்றனர். வாழ்த்தினர்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட மற்றும் மீட்பு கவனம் செலுத்த நெருக்கடி மற்றும் நோய் தடுப்பு பணிகளில் வேண்டியிருந்ததால் உடனடியாக இந்த கோரிக்கை குறித்து முடிவெடுக்க முடியவில்லை என்பதை அனைவரும் உணர்ந்துள்ளோம்.

தற்போது நோய் தொற்று குறைந்து இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க முடிவெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளார்.

தனது சிறப்பான செயல்பாடுகளால் இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்று முன்னோடி முதல்வராக விளங்கிவரும் தாங்கள் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தி இந்தியாவிற்கே வழிகாட்டும் முதல்வராக விளங்கிட வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும்.

விரைவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு 5 லட்சம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் குடும்பங்களை சேர்ந்த 25லட்சம் பேர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரிதும் வேண்டுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.