TAPS அரசாணை 111 எதற்கு? யாருக்கு?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
01.01.2026ல் நடைமுறைக்கு வந்த TAPS திட்டத்திற்கான விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்திற்கான சரியான பயனாளிதான் என ஒரு ஊழியரை உறுதிப்படுத்தும் வரை அவரது (/ குடும்பத்தின்) வாழ்வாதாரத்திற்கான இடைக்கால பணமளிப்பினை மாதந்தோறும் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடாக, நிதித்துறையின் அரசாணை 111ஐ 16.06.2026 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க திட்ட செயலாக்க காலம் வரையிலான ஊழியரது வாழ்வாதாரத்திற்கான இடைக்கால மாதாந்திர பணமளிப்பு (Interim Monthly Payout) சார்ந்தது மட்டுமே. =============================
*அரசாணை 111 யாருக்குப் பொருந்தும் ?*
1. CPSல் பணியேற்று 01.01.26க்குப்பின் ஓய்வு பெற்றோர்
2. 01.01.26க்குப்பின் ஓய்வு பெற்றும் பணப்பலன்கள் பெறாது இறந்துள்ளோர்
3. TAPS விதிமுறைகள் வெளியாகி நடைமுறைக்கு வரும்வரை ஓய்வு பெற உள்ளோர்
4. ஓய்விற்கு முன்பே இறக்க நேரிடுவோர்
=============================
*CPS / TAPS விருப்பத் தேர்வின் நிலை என்ன?*
Immediate Opt-Out option, Post notification further Opt-Out option எனும் இரு நிலைகளில் CPS / TAPS விருப்பத் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.
*Stage 1 : (Immediate Opt-Out option)*
01.01.26க்குப்பின் பணிக்காலத்தில் இறந்த / ஓய்வு பெற்ற ஊழியர் விரும்பினால், இப்போதே TAPS வேண்டாமென விலகிக் கொண்டு CPS திட்டப்படியான முதிர்வுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். (பணி ஓய்வு பெற்றபின் இறந்துள்ளோருக்கு இவ்வாய்ப்பு இல்லை.)
*Stage 2 : (Post notification further Opt-Out option)*
01.01.26க்குப்பின் பணிக்காலத்தில் இறந்த / ஓய்வு பெற்றபின் இறந்துள்ள / ஓய்வு பெற்ற ஊழியர் தற்போது TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பைப் பெற ஒப்புதல் அளித்துவிட்டு, TAPS விதிமுறைகள் முழுமையாக வெளிவந்தபின்பு விரும்பினால் TAPSலேயே தொடரலாம்; அல்லது TAPSஆல் பயனில்லையெனில், அதுவரை பெற்ற இடைக்கால மாதாந்திர பணமளிப்பைக் கழித்துக் கொண்டு CPS திட்டப்படி எஞ்சிய முதிர்வுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
============================= *TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பு எவ்வளவு?*
👉 குறைந்தது 10 ஆண்டுகள் பணிக் காலத்துடன் ஓய்வு பெற்ற & ஓய்வு பெறவுள்ள அல்லது இனி பணிக்காலத்தில் இறக்க நேரிடும் ஊழியரது மாத இறுதி ஊதியத்தின், Basic Payல் 30% + 60% DA மாதந்தோறும் வழங்கப்படும்.
👉 அடிப்படை ஊதியத்தில் 30% என்பது 10,000/-க்கும் கீழாக இருந்தால், ரூ.10,000 + 60% DAவும் வழங்கப்படும்.
👉 01.01.26 முதல் ஓய்வு பெற்றும் தற்போது வரை பணப்பலன் பெறாது இறந்துள்ள ஊழியரது குடும்பத்திற்கு 60% இடைக்கால பணமளிப்பு மாதந்தோறும் வழங்கப்படும்.
👉 இத்தொகை ஊழியர் ஓய்வுற்ற / இறந்த மறுநாள் முதல் கணக்கிடப்பட்டு (நிலுவைத் தொகையுடன்) வழங்கப்படும்.
=============================
*TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பு பெற என்ன செய்ய வேண்டும்?*
இதுவரை ஓய்வு பெற்ற / இறந்த ஊழியர்கள் குடும்பத்தார் இந்த அரசாணை வெளியான 16.06.2026ல் இருந்து 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இனி ஓய்வுபெற உள்ளோரோ / இறக்க நேரிடும் ஊழியரது குடும்பத்தாரோ ஓய்வுற்ற / இறப்பு நேரிட்ட தேதியிலிருந்து 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
============================= *யாருக்கு எந்தப் படிவம்?*
TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பு பெற, ஓய்வு பெற்றவருக்கு Form-I, இறந்தோரின் குடும்பத்தாருக்கு Form-II.
CPS Settlementஐப் பெற்று முழுமையாக விலகிக் கொள்ள, ஓய்வு பெற்றவருக்கு Form-III, பணியில் இறந்தோரின் குடும்பத்தாருக்கு Form-IV.
=============================
இந்த அரசாணையானது, அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கோரிக்கை குறித்த தெளிவின்றி அவசரகதியில் எவ்வித கணக்கீட்டு வழிமுறைகளுமின்றி கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அடிப்படைப் புரிதலேயின்றி பாராட்டிக் கொண்டு தங்களுக்குத் தாங்களே நன்றி சொல்லிக் கொண்ட கூட்டத்தை எண்ணி வெதும்பிக் கிடந்த - ஓய்வு பெற்றும் ஒன்றுமே கிட்டாத ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு தற்காலிக ஆறுதலைத் தரக்கூடும்.
எனினும், TAPSன் விதிமுறைகள் தெரியாமல் பழைய வில்லன் CPS பரவாயில்லையா? புதிய வில்லன் TAPS பரவாயில்லையா? என்பதை எவராலும் தெரிவிக்கவோ - முடிவிற்கு வரவோ முடியவே முடியாது. எனவே, ஓய்வுற்றோர் / இறந்தோர் Stage IIவை தேர்வு செய்வதுதான் இப்போதைக்குரிய ஒரே ஆக்கப்பூர்வ வழி.
TAPSம் வில்லன் தான் என்பதை அதன் அறிமுக நிலையிலேயே யாவருமே நிதானிக்கலாம். சிலர் அந்நிதானத்தை ஏற்க அவர்தம் கட்சிநேயம் தடையாக அமைந்திருந்தது. அதனால் எழுந்த இழப்பை உணர்ந்து இனியேனும் முழுமையான ஊழியர் நலனிற்காகத் தங்களைத் திருப்பிக் கொண்டால் நலமாயிருக்கும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே 100% அரசிற்கும் அரசு ஊழியர்களுக்கும் ஒருசேர பயனைத் தரும். பணியிலுள்ளோர் அப்பயனை அறுவடை செய்வதற்கான பயணத்தைத் தொடர்வோம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.