பள்ளி ஆசிரியை வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை- மர்மநபர்கள் கைவரிசை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 29, 2025

பள்ளி ஆசிரியை வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை- மர்மநபர்கள் கைவரிசை



பள்ளி ஆசிரியை வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை- மர்மநபர்கள் கைவரிசை 103 sovereigns of gold jewelry stolen from a school teacher's house - the work of unidentified culprits.

"வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குனியமுத்தூர்:

கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது65).

இவர் அந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெபமார்ட்டின். இவர்களுக்கு ரூபா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ரூபா தனது பெற்றோரின் வீட்டின் அருகேயே வசித்து வருகிறார். ராஜனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்.

இந்த நிலையில் ராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மனைவி மற்றும் மகள் ரூபாவுடன் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு இன்று காலை கோவைக்கு வந்தார்.

பின்னர் ரூபா அவரது வீட்டிற்கு சென்று வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு தானாகவே திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார்.

ஊருக்கு செல்வதற்கு முன்பாக ரூபா தனது வீட்டில் மொத்தம் 103 பவுன் நகைகளை பீரோவில் பூட்டி வைத்து சென்றிருந்தார். இன்று காலை வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 103 பவுன் நகைகளும் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்ததும் கோவை தெற்கு உதவி கமிஷனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி உள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை. இதனால் தெரிந்தவர்கள் யாரோ இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் போலி சாவி தயாரித்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியையின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது."

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.