தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 25, 2025

தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்



தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் Strict action should be taken against the headmaster - Seeman

புழுதிவாக்கத்தில் வகுப்பறையில் பேனா மை கொட்டிய 5-ம் வகுப்பு மாணவியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை புழுதிவாக்கம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும், உள்ளகரம் நியூ இந்தியன் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 09.10.25 அன்று காலை வகுப்பறையில் பேனாவைத் திறந்த போது, 'மை' சட்டை, பாவாடை மற்றும் தரையில் கொட்டியதால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, தரையைத் துடைக்கும் கட்டையால் சிறுமியைக் கடுமையாக தாக்கியதில் மாணவி படுகாயமுற்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. தற்போது கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி கடுமையான பாதிப்புக்கு உள்ளாக காரணமான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது தமிழ்நாடு காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.

அப்பகுதியை சேர்ந்த திமுக வட்டச்செயலாளரும், 186-வது வட்ட மாமன்ற உறுப்பினருமான மணிகண்டன் தலையீடு காரணமாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறதா? அல்லது பாதிக்கப்பட்ட சிறுமி ஆதித்தமிழ்க்குடி என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் பாகுபாடு காட்டுகிறதா? என்ற அப்பகுதி மக்கள் எழுப்பும் கேள்விகள் மிகமிக நியாயமானதேயாகும்.

சிறுமியின் கடுமையான உடல்நலப்பாதிப்பு குறித்த புகாரை ஏற்க மறுத்து, இதுவரை வழக்கு பதியாதது ஏன் என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரசு என்ன பதில் கூறப்போகிறது? திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் என்றால் ஒரு நீதி? அதிகாரம் மிக்கவர்கள், வசதி படைத்தவர்கள் என்றால் வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காத்த சமூகநீதியா? பெற்றுத்தந்த சமத்துவமா? வெட்கக்கேடு!

ஆகவே, சென்னை புழுதிவாக்கத்தில் 5-ம் வகுப்பு சிறுமியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது உடனடியாக வழக்கு பதிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.