அரசுப் பள்ளி ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக மோசடி - ஐகோர்ட் முக்கிய உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 22, 2025

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக மோசடி - ஐகோர்ட் முக்கிய உத்தரவு



அரசுப் பள்ளி ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக மோசடி - ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கல்வித் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி உட்பட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விரைவில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆதவா மாணவர்கள் நல அறக்கட்டளை செயல்பட்டு வந்தது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்துதல், கற்பித்தல், பயிற்சி அளித்தல் தொடர்பாக கல்வித் துறையுடன் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்த அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு மாவட்டங்களில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகார்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பப்பட்டது. அம்மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பேச்சிசாந்தி, மாரியப்பன், ஷைலஸ்ரீ, அம்பிகைபாலன், பிரசாத் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் பேச்சிசாந்தி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பேச்சிசாந்தி ஜாமீன் கோரியும், மற்ற 4 பேர் முன்ஜாமீன் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: போலீஸ் விசாரணையில் ஆதவா அறக்கட்டளை கல்வித்துறையுடன் 18 மாவட்டங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து செயல்பட்டதும், அந்த மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இருப்பினும் இந்த அறக்கட்டளை கல்வித்துறை அதிகாரிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தவறாக காண்பித்து பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த மோசடி நடைபெற்றிருக்காது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இம்மோசடி 2023-ல் நடந்துள்ளது. சிபிசிஐடி தற்போது தான் விசாரணையை தொடங்கி உள்ளது.

விசாரணையை தாமதமின்றி முடிக்க வேண்டும். அறக்கட்டளையுடன் இணைந்து மோசடிக்குத் துணை போன கல்வித் துறை அதிகாரிகள் மீதும் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீதான துறை ரீதியான விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்.

மனுதாரர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கும், மோசடிக்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது விசாரணையின் போதுதான் தெரிய வரும். எனவே மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.