வேலைவாய்ப்பு விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
வேலைவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) துணை இயக்குநர் பிரசாந்த் காரத் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமன கடிதங்கள், அதுதொடர்பான தகவல் தொடர்புகளில் மோசடிகள் நடைபெறுவதாக ஏஐசிடிஇ மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு புகார்கள் வரப்பெற்றுள்ளன. போலி மின்னஞ்சல் முகவரி, ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலமாக இதுபோன்ற மோசடிகள் நடத்தப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் நபர்கள் பணத்தை இழக்க நேரிடுகிறது. அது ஏஐசிடிஇயின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இத்தகைய மோசடி விளம்பரங்கள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், அவற்றை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்த வேண்டும். அதேபோல, ஏஐசிடிஇயின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து மின்னஞ்சல் பெறப்பட்டால் மட்டுமே கல்வி நிறுவனங்கள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். பிற நிறுவனங்கள், தனிநபர்கள் இதுபோன்ற போலி விளம்பரங்கள் செய்வது தெரியவந்தால் அதுகுறித்து உடனடியாக சைபர் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.