ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் (One Health & Climate Hub) நிறுவுதல் - அரசாணை வெளியீடு! Establishment of One Health & Climate Hub - Government Decree issued!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை நிறுவுதல்- தமிழ்நாடு அரசு – ஆணை வெளியிடப்படுகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் (ப்பி1) துறை அரசாணை (நிலை) எண்.385
நாள்: 22.11.2024
குரோதி வருடம், கார்த்திகை-07 திருவள்ளுவர் ஆண்டு-2055 படிக்க:
1. அரசாணை (ப) எண்.52, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் (EC−2) துறை, நாள்:17.03.2023. 2. புது தில்லி, மத்திய அரசின் அறிவியல் துறைச் செயலாளரின் நேர்முக கடித எண்.J/13/2022-PROJ நாள்.27.06.2024.
3. அரசாணை (ப) எண்.129, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்(EC-4) துறை, நாள்:23.07.2024. 4. தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநரின், கடித எண். 4474/TNHSRB/SHA/2023, நாள் 27.09.2024.
*****
ஆணை:
கோவிட்-19 பெருந்தொற்று, உலகம் முழுவதும் தொற்று நோய்கள் வேகமாகப் பரவுவதையும், உயிரினங்களுக்கிடையே பல்கிப் பெருகும் தன்மை உட்பட, வாழ்வின் பல்வேறு நிலைகளில் அவற்றின் ஆழமான தாக்கத்தை தொற்று நோய்கள் ஏற்படுத்தக் கூடும் என்பதை எடுத்துரைத்துள்ளது. பெருந்தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளுடன் பெருகி வரும் நோய்களுக்கெதிராக மேம்பட்ட / உயர் தயார்நிலையின் அவசரத் தேவையை இந்நிலையை எதிர்கொண்ட அனுபவம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், சில நோய்கள் வாழ்வாதாரத்திற்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க வகையில் அச்சுறுத்துவதோடல்லாமல் மனிதர்கள், விலங்குகள், தாவர மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு இவையனைத்தையும் ஒருங்கிணைத்து, விரிவான மற்றும் நிலையான தீர்வுகளை ஏற்படுத்துவதை அவசியமாக்குகின்றன. இந்திய அரசு, தமிழ்நாட்டில் பொது சுகாதாரம், விலங்குகள் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நலவாழ்வைப் பாதுகாப்பதற்காக ஒன்றோடொன்று தொடர்புடைய முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கான மாநிலத்தின் பங்கேற்பினைக் கோரியுள்ளது. 2. ஒருங்கிணைந்த நல்வாழ்வு என்பது, மக்கள், விலங்குகள் மற்றும் சூழலியல் அமைப்புகளின் நல்வாழ்வை சமநிலைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஓர் அணுகுமுறை சுகாதார நிறுவனம் (WHO) வரையறுக்கிறது. அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் வகையில், மக்களின் நல்வாழ்வு என்பது அனைத்து விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்திருப்பதை அது அங்கீகரிக்கிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைந்த நல்வாழ்வு (One Health) மையம் ஊக்குவிக்கிறது. ஒருங்கிணைந்த நல்வாழ்வு (One Health) மையம், இத்துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நீடித்த மற்றும் நிலையான சுகாதார அமைப்புகளை ஊக்குவிப்பதற்கும் முயற்சி மேற்கொள்கிறது.
3. அதேபோன்று, பெருந்தொற்று போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களின் தோற்றுவாய், சுகாதாரப் பாதிப்புகள், பாலின சமத்துவமின்மைகள், சுகாதாரமான உணவு மற்றும் சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றில் தோன்றும் குறைபாடுகள், வனவிலங்கு வணிகம் மற்றும் கடத்தல், பல்லுயிர்தன்மை இழப்பு, வாழ்விடச் சுருக்கம் வாழ்விடங்கள் தனித்தனி தொகுப்புகளாக உடைதல், வெப்ப அலைகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் (AMR) மற்றும் இவை போன்ற பல்வேறு வாழ்வியல் சிக்கல்களுக்கு காலநிலை மாற்றத்தில் அவ்வப்போது தோன்றும் மாறுபாடான சூழல் வழிவகுத்துள்ளது. மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசு, காலநிலை மாற்றம் மற்றும் மனித நல்வாழ்வு (NPCCHH) குறித்த தேசியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் நோயுற்ற நிலை, இறப்பு, காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 4. தமிழ்நாடு அரசு, நிலையான மற்றும் உறுதியான வருங்காலத்திற்கான மாநிலத்தின் பொறுப்புறுதியின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் 'ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவுக் குழு' ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பன்முக தன்மை வாய்ந்த சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்குழுவில், தொடர்புடைய துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 23 உறுப்பினர்களும், வல்லுனர்களும் அடங்குவ்ர். மேலும், இது தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் தலைமையில் செயல்படுகிறது. மேலும், விரிவான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் வாயிலாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மாநிலத்தின் பொறுப்புறுதியின் ஒரு பகுதியாகவும், முக்கிய பொறுப்பாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை உறுதி செய்யவும், அரசு, மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையின் வாயிலாக, 'காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு நிருவாக ஆட்சி மன்றம்' ஒன்றை அரசு நிறுவியுள்ளது. இக்குழுவிற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராகவும், முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளின் முதுநிலை செயலாளர்கள் மற்றும் காலநிலை அறிவியல், சுற்றுச்சூழல் கொள்கை •
வல்லுநர்கள் மற்றும் குடிமையியல் தன்மையுடைய சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். 5. இந்த பொருண்மையில், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர், மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அவருடைய கடிதத்தில், நிருவாகக் குழுவின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அதனுடன் ஒருங்கிணைந்து, கீழே குறிப்பிடப்பட்ட நோக்கங்களுடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் ஒன்றை அமைப்பதற்கான கருத்துரு ஒன்றை அரசுக்கு அனுப்பியுள்ளார்.
(1) இந்த முன்முயற்சியானது, உயரும் வெப்பநிலை, பூச்சியினால் பரவும் நோய்கள். அதிகரித்து வருவது, பல்லுயிர் இழப்பு மற்றும் கடலோர பாதிப்புகள் போன்ற குறிப்பிட்ட- வட்டாரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கான செயலூக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. (ii) குறிப்பாக ஊரகப்பகுதிகளிலும் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் ஏற்படும் வெப்ப அலைகள் மற்றும் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய் பரவல் போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்கும் ஆயத்தப்படுத்துவதற்கும் மாநிலத்தின் செயல் திறனை மேலும் வலுப்படுத்தும். (iii) இந்த மையம், புதுமையான தீர்வுகளை அளிப்பதுடன் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு முறைகளில் திறனை மேம்படுத்தும். மேலும் மாறிவரும் காலநிலை அமைப்பிற்கேற்ப, மக்கள் மற்றும் சூழலியல் அமைப்பு முறைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை உருவாக்கும்.
(iv) இது மாநிலத்திற்கான நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும் மீள்தன்மையை வளர்த்தல் குறித்த சிந்தனையையும் குறிப்பிடுகிறது.
ஒருங்கிணைந்த எதிர்காலத்திற்கான அணுகுமுறையையும் 6. ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தின் கீழ் மேற்கொள்ளக் கருதப்பட்டுள்ள செயற்பாடுகள் வருமாறு:- a) ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளை மேம்படுத்துதல்: வெப்பம் மற்றும் காற்று மாசுப்பாட்டால் பாதிப்புக்குள்ளாகும் சாலையோரவாசிகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள், வனங்கள் மற்றும் சுரங்க பகுதிகள் முதலியன போன்ற அதிக ஆபத்தான பகுதிகளின் அருகில் வசிப்பவர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களை இலக்காகக் கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளால் உருவாகும் உடல்நல பாதிப்புகளை களைவதற்கான கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை வடிவமைத்தல்.
காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தேசிய திட்டம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த நல்வாழ்வு முயற்சி ஆகிய இரண்டு திட்டங்களின் இலக்குகளுடன் ஒத்திசையக்கூடிய விரிவான கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக மாநில அரசின் உரிய துறைகளுடன் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனங்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, முதலியன) ஒருங்கிணைதல். b)காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்த கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல்: காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக தோன்றும் உடல்நலம் சார்ந்த அச்சுறுத்தல்கள் குறித்த தரவுகளை கண்காணித்து ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான கண்காணிப்பு ஏற்பாட்டு முறையை ஏற்படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதிசெய்யும் வகையில், விலங்குகளால் பரவும் நோய்கள், வெப்பம் மற்றும் காற்று மாசு, நோய்க்கடத்திகளால் பரவும் நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பாற்றல் முதலியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாட்டுமுறைகள் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளை (response mechanism) உருவாக்குதல்.
மனிதர்கள், விலங்குகள், சூழலியல் ஆகியவை ஒன்றோடொன்று அதிகம் தொடர்புடைய பகுதிகளின் மீது அதிகம் கவனம் செலுத்தி, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த அடிப்படை / குழு ஆய்வு நடத்துவதற்காக ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைதல். இதனை மேலும், வலுப்படுத்துவதற்காக, நுண்காலநிலை மற்றும் நோய்த்தொற்றுப்பரவல் மீதான அதன் தாக்கம் குறித்த சான்று அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
நீடித்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை முதன்மையாகக் கொண்டு ஒருங்கிணைந்த சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதுமையான தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊக்குவித்தல்.
c)துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை. எளிதாக்குதல் மற்றும் திறன் மேம்பாடு:
ஒருங்கிணைந்த சுகாதாரத்திற்கான கொள்கைகளை (One Health) திறம்பட செயல்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற பல்வேறு அரசு துறைகளுக்கிடையே வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல். காலநிலை மாற்றம் தொடர்பான சுகாதார பாதிப்புகளைக் கண்டறிந்து, கண்காணித்து மற்றும் நிருவகிக்க மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துதல்.
பொறுப்பாளர்களுக்கு (சுகாதார சேவை வழங்குநர்கள், வனத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட) ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறை மற்றும் காலநிலை தொடர்பான சுகாதார பாதிப்புகள் குறித்த அவர்களின் புரிதலை வலுப்படுத்துவதற்கு, அவர்களுக்கு முறையான பயிற்சி திட்டங்கள், பட்டறைகள் மற்றும் உச்சிமாநாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துதல். சுகாதார சவால்களைச் எதிர்கொள்வதில் பல்வகை-பொறுப்பாளர் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கு குடிமை (சிவில்) சமூக நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
d) சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைகள், நிலையான வழிகாட்டிநெறிமுறைகள், திறன் மேம்பாட்டுப் பொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு தளங்களின் மேம்பாடு:
ஒவ்வொரு சுகாதார கூறும், விரிவான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு முறைகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி, மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார வளர்ச்சிக்கேற்ப இந்த அமைப்புகள் இருப்பதை உறுதிசெய்தல்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நலத்தில் ஏற்படும் பலதரப்பட்ட சவால்களுக்கு சுகாதார திட்டம் ஒன்றில், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைத்து ஒரு விரிவான, ஒருங்கமைந்த மற்றும் தகவமைப்பு ஏற்புத்தன்மையை உறுதி செய்தல். இந்த நடைமுறைகளை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, பொது சுகாதாரம், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் வகையிலான அனைத்து துறைகளில் திறன் மேம்பாட்டு அணுகுமுறையை உருவாக்க இயலும்.
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுடன் தொடர்புடைய சுகாதார சீர்கேட்டினைக் களைவது மற்றும் தொற்று பரவலைத் தடுத்து அவற்றை ஒழிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்கு அரசு துறைகள், மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரமன்றங்களுக்கு வழிகாட்டும் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குதல்.
ஒருங்கிணைந்த சுகாதார சவால்களை நிருவகிப்பதற்கும் குறைப்பதற்கும் சுகாதாரப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பயன்படுத்தக்கூடிய திறன்-கட்டமைப்பு பொருட்களைத் (கையேடுகள், கருவித்தொகுப்புகள் மற்றும் பயிற்சி தொகுதிகள்) தயாரித்தல்.
இந்த மையத்தின் திட்டப் பணியை விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைந்த நல்வாழ்வு காலநிலை கல்வியறிவு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் மற்றும் பல்துறை ஒழுங்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் சமூக ஊடக செய்திகளை அனுப்புதல். e)காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் தொடர்பான நோய்களை கண்டறிதல்: இந்த மையம் சுகாதார பிரச்சினைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை கண்டறிவதற்கு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இதில், விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், நோய் கடத்திகள் மூலமாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், வெப்பம் தொடர்பான நோய்கள், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் மற்றும் நீர் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் ஆகியவை புவியியல் ரீதியாக பரவுவதை புரிந்துக்கொள்வதாகும்.
இந்த மையம் சுகாதார நிபுணர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொற்றுநோயியல் வல்லுநர்களுடன் ஒருங்கிணைந்து நோய் பரவுதல் குறித்த வரலாற்றுத் தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றை காலநிலை நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும்.
• இந்த மையமானது காலநிலைச் சூழ்நிலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஏற்படும் நோய்களின் தீவிரத்தன்மையை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முன்கணிப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கு செயல்படும். இது பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்களை கவனத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைக் கண்டறிவதற்கு மாநில அளவிலான தரவுத்தளத்தை உருவாக்குவதோடு, அதனை தொடர்ந்து புதுப்பிக்கும்.
இந்த மையம் நோய் பரவுதலை முன்னரே கண்டறிந்து, நோய் ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்வதற்காக, சுகாதாரப் பணியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உட்பட தொடர்புடைய பொறுப்பாளர்களுக்கு நோய் பரவுதல் குறித்த கண்டுபிடிப்புகளை தெரிவிக்கும். f)தற்போதுள்ள மருத்துவமனைகளைப் பசுமைமயமாக்குவதற்கும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்கிற வகையில் அவற்றை அமைப்பதற்குமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள்: மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், குறிப்பாக தொலைதூரப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் குளிர்பதனக் கிடங்குகளை சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கச் செய்தல், மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் தகடுகளை நிறுவுதல் ஆகிய நடவடிக்கைகள் வாயிலாக தற்போதுள்ள சுகாதார உட்கட்டமைப்பை, காலநிலைமாற்றத்தை எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க அமைப்புகளாக மாற்றுவதற்கு உரிய பொறுப்பாளர்களுடன் இந்த மையம் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த மையம், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளில் வழக்கமான பயன்பாட்டைக் கண்காணித்து, தற்போதைய மின் நுகர்வையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, சுகாதார அமைப்புகளில் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் (கார்பன்) அளவைக் குறைப்பதுடன், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்யும்.
தடுப்பூசி வழங்கல் தொடரமைப்புகள், சுகாதார சேவை வழங்கல் ஆகியவற்றுக்கு, நம்பகத்தன்மை வாய்ந்த தடையற்ற மின்சாரம் இன்றியமையாது தேவைப்படுகின்ற பழங்குடியினர் வாழும் பகுதிகள் மற்றும் சூறாவளிகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகள் போன்ற அதிக இடர்பாடுகள் கொண்ட மற்றும் பின்தங்கிய பகுதிகளின் மறுசீரமைப்பிற்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும். மின்தடை ஏற்படும்போது, குறிப்பாக தடையற்ற மின்சாரம் கிடைக்கப்பெறாத பகுதிகளில், தடுப்பூசிகள் மற்றும் இன்றியமையாத மருந்துகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகளில் குளிர்பதனக் கிடங்குகள் சூரிய ஒளி மின் ஆற்றலைக் கொண்டு இயங்குவதை இலக்காகக் கொண்டு இந்த மையம் செயல்படும்.
g)நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் (AMR) ஏற்படும் சிக்கல்களைச் சமாளிப்பதற்குரிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நிபுணத்துவம் கொண்ட முகவரமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.
h)அதிநவீன ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மாற்ற மையம் அமைத்தல்: காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படுகிற நோய்களுக்கென, உடல்நலம் சார்ந்த, நிதி தொடர்பான மற்றும் நோய்த்தொற்று குறித்த விவரங்களைக் கண்காணித்து நிருவகிப்பதற்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வலுவான தரவு மேலாண்மை அமைப்புகள் நிறுவப்படும். மாநில அளவில் அதிநவீன ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மாற்ற மையம் ஒன்று அமைக்கப்படும். மேலும் இந்த அமைப்பு, விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவும் நோய்கள், நோய் கடத்திகளால் பரவும் நோய்கள், வெப்ப அயற்சி, சுவாசக் கோளாறு நோய்கள் போன்ற, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கிற நோய்கள் குறித்த நிகழ்வுகளின் நிகழ்நேர தரவுகளைச் சேகரித்தல், அவற்றைப் பகுப்பாய்வு செய்தல், அறிக்கையளித்தல் போன்றவற்றை உறுதி செய்யும். இந்தத் தரவுகள் ஒருங்கிணைப்படுவதன் வாயிலாக, தவறுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு சரி செய்யப்படுவதால், வள ஆதார ஒதுக்கீடு, சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் கொள்கை உருவாக்கம் போன்ற தகவல்களைப் பெற முடிகிறது.
மேலும், இந்தத் தரவுகள், முன்கூட்டியே கணிக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிற சுகாதார இடர்பாடுகளை எதிர்கொள்ளும் திறனை மாவட்ட அளவில் மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். 7. தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரின் கருத்துருவைக் கவனமாகக் கருதிப்பார்த்த பின்னர், அக்கருத்துருவை ஏற்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மாற்ற மையத்தை பின்வருமாறு நிறுவுவதற்கான நிருவாக அனுமதியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது:-
(i) பின்வரும் குழுவினால் வழிநடத்தப்படுகிற ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மாற்ற மையம், மேலே பத்தி 6-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாகும். குழுவின் விவரம்
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD Government Decree issued! G.O.Ms.No.385 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.