தமிழ்ப்புதல்வன் திட்டம்: மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 1, 2024

தமிழ்ப்புதல்வன் திட்டம்: மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம்.



தமிழ்ப்புதல்வன் திட்டம்: மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம்.

உயர்கல்வியில் பெண்கள் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் என பெயரும் வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு உதவிதொகை வழங்கப்பட உள்ளது.

இளநிலை கலை அறிவியல் கல்லூரி, தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவர்களும் பயன்பெற உள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகிற 9-ந் தேதி கோவையில் தொடங்கி வைக்கப்படுகிறது. கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இதற்கிடையே தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வங்கி கணக்கு தொடங்கும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் மட்டும் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு மாணவர்கள் 1,200 பேர் பயன் அடைய உள்ளனர்.

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்னும் முழுமை அடையாததால் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்ததும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கலைக்கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பார்மசி, சட்ட கல்லூரி என 412 கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த தகுதியான மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை.

இதனால் அவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்லூரிகளில் வங்கி அதிகாரிகள் நேரடியாக சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.