அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 5,546 பணியிடங்கள் உபரி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 6, 2024

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 5,546 பணியிடங்கள் உபரி!அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 5,546 பணியிடங்கள் உபரி!

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் உபரியாக உள்ள 5,546 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள இடங்களுக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் 3,156 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 3,094 உயர்நிலைப் பள்ளிகள், 6,976 நடுநிலைப் பள்ளிகள், 24,350 தொடக்கப் பள்ளிகள் என 37,576 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவைதவிர, அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் சிறுபான்மையற்ற அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் மாற்றப்பட்டனர். இந்த வகையில் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 244 ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக, தொடக்கக் கல்வித் துறையில் மாநிலம் முழுவதுமுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டன. 2023-24 -ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அடிப்படையில் இந்த உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகள் என இரு வகைகளாக இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

10 தென் மாவட்டங்களில் 3,200 பணியிடங்கள் உபரி: சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் 2,220 ஆசிரியர்கள், சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,326 ஆசிரியர்கள் என மொத்தம் 5,546 ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் மட்டும் சுமார் 3,200 ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன.

உபரி பணியிடங்கள் குறைவான மாவட்டங்கள்: தருமபுரி, அரியலூர் மாவட்டங்களில் மட்டுமே முறையே 7, 8 என ஒற்றை எண்ணிக்கையில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். இதேபோல, கிருஷ்ணகிரியில் 11, திருப்பூரில் 17, கரூர், கடலூரில் தலா 18, காஞ்சிபுரத்தில் 24 என 25-க்கும் குறைவான உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.

50-க்கும் குறைவான ஆசிரியர் உபரி பணியிடங்கள் பட்டியலில் கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அரசுக்கு நிதி இழப்பு: கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் சில அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன.

இந்தப் பணியிடங்களில், அந்தந்தப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் மாற்றுப் பணியில் அனுப்பப்படுகின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திறன் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

5,546 உபரி ஆசிரியர் பணியிடங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுகிறது.

ஒருபுறம் உபரி பணியிடங்களுக்கு வீணாக ஊதியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மறுபுறம், அரசுப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்படைந்து வருகிறது.

அரசுப் பள்ளிகளுக்கு பணியிட மாறுதல்: உபரி பணியிடங்களிலுள்ள ஆசிரியர்களை, முதல் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு மாறுதல் செய்ய வேண்டும்.

எஞ்சியவர்களை அரசுப் பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இன்றைய சூழலில், அரசுப் பள்ளிகளுக்கு மாறுவவதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்த ஆசிரியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் பயன்பெற்று வரும் சில நிர்வாகிகள், பணியிட மாறுதலுக்கு தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்கள் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. உபரி ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டால், அந்தப் பள்ளிகளின் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெறுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.

அரசு நிதி வீணாக செலிவிடப்படுவதைத் தவிர்க்கவும், அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையிலும் இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.