பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளி வைக்க கோரிக்கை!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 28, 2024

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளி வைக்க கோரிக்கை!!!

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளி வைக்க கோரிக்கை!!!
தமிழகத்தில் முன்பெல்லாம் புதிய கல்வியாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆரம்பமாகி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் கடும் கோடை வெப்பத்தின் காரணமாகப் பள்ளிகள் திறப்பது சற்று தாமதமாகி வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டன. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஆயத்தமாகி வருகின்றனர். முன்னதாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் கோடை வெப்பத்தின் தாக்கம் நிலவி வந்தது.

இதனால் பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி முதல் துவங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெப்பத்தின் தாக்கத்தாலும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன்4 ஆம் தேதி வெளியிடப்படுவதாலும் 6ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பை மேலும் சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலவிய வரலாறு காணாத வெப்பம் நீங்கி தற்போது பல இடங்களிலும் கோடை கனமழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்காக ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. காற்றழுத்த மாறுபாட்டால் மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு நிலையற்ற வானிலை நிலவுவதாலும், ஜூன் 6ஆம் தேதி வியாழன் கிழமை பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளி இயங்கும் என்பதால், ஜூன் 10ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்படுகிறது. அம் முடிவுகள் முழுமையாக வெளிவர ஒரு நாள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதில் மாற்றம் ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் வருமா என எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.