1.16 கோடி மொபைல் எண்களை சரிபார்க்க ஆசிரியர்களுக்கு உத்தரவு - OTP எண்களை தெரிவிக்க பெற்றோர் மறுப்பதால் சவால் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 16, 2024

1.16 கோடி மொபைல் எண்களை சரிபார்க்க ஆசிரியர்களுக்கு உத்தரவு - OTP எண்களை தெரிவிக்க பெற்றோர் மறுப்பதால் சவால்



1.16 கோடி மொபைல் எண்களை சரிபார்க்க ஆசிரியர்களுக்கு உத்தரவு - OTP எண்களை தெரிவிக்க பெற்றோர் மறுப்பதால் சவால் Order to teachers to verify 1.16 crore mobile numbers – Challenge as parents refuse to share OTP numbers

கல்வித்துறையில் 'எமிஸ்'ல் பதிவாகியுள்ள மாணவர்களின் 1.16 கோடி அலைபேசி எண்களை சரிபார்க்கும் பணியில் விடுமுறையிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எண்களை உறுதி செய்ய பெற்றோரிடம் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்பதால் 'மோசடி செய்யும் நோக்கில் பேசுகின்றனர்' என நினைத்து 'ஓ.டி.பி., எண்களை சொல்ல முடியாது' என பெற்றோர் மறுப்பதால் இப்பணி பெரும் சவாலாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் உள்ளிட்டோரின் அனைத்து தகவல்களும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 'எமிஸ்' தளத்தின் தகவல்கள் சில தனியாருக்கு கைமாறுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இருப்பினும் தகவல்கள் பதிவேற்றம் செய்வது தொடர்கிறது. தற்போது, ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் 1.16 கோடி அலைபேசி எண்கள் சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.

இதற்காக கோடை விடுமுறையிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. எண்கள் சரிபார்ப்பதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட பெற்றோர் எண்ணிற்கு செல்லும் ஓ.டி.பி., எண்ணை கேட்டு, எமிஸில் பதியும் வகையில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி பெற்றோரை அழைக்கும் ஆசிரியர்கள், ஓ.டி.பி., எண்ணை கேட்டால், அதை தெரிவிக்க மறுக்கின்றனர்.

'சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தப்பிக்க ஓ.டி.பி., எண்களை தெரிவிக்காதீர்கள்' என வங்கிகள் எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பி வரும் நிலையில் 'ஓ.டி.பி., ஏன் கேட்கிறீர்கள். நீங்கள் யார். போலீசில் புகார் செய்துவிடுவேன்' என கூறி அழைப்பை பெற்றோர் துண்டித்துவிடுவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். விடுமுறையிலும் இதுபோல் தேவையில்லாத பணிகளை ஆசிரியர்களிடம் திணித்து மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கோடையில் கொடும் தண்டனை இது

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ரங்கராஜன் கூறியதாவது:

எமிஸ் பணியால் கற்பித்தல் பணி பாதிக்கிறது. அப்பணியில் இருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சரிபார்ப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓ.டி.பி., பெறுவதில் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆசிரியர்களை சந்தேகமாக பார்க்கின்றனர்.

இத்துறையில் ஏராள திட்டப் பணிகளுக்கு ரூ. பல கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதை செலவிட்டு அரசிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என 'ஏசி' அறையில் அமர்ந்துகொண்டு சிந்திக்கும் சில அதிகாரிகள் கடைசியாக கஷ்டப்படுத்துவது ஆசிரியர்களை தான்.

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது சலுகை இல்லை. அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு என்பதை எங்களுக்கு 15 நாட்களாக குறைத்துக்கொண்டு பெறப்பட்ட உரிமை இது. கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டு கற்பித்தல் திறனை மேம்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க செலவிடுகின்றனர்.

அதை தடுக்கும் வகையில் எமிஸ் பணிகள் வழங்கப்படுகின்றன. ஒருபக்கம் 'இப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்' என அமைச்சர் கூறுகிறார். மறுபக்கம் அதிகாரிகள் ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இரட்டை நிலைப்பாட்டால் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். தற்போதைய அலைபேசி சரிபார்ப்பு பணி கோடையில் வழங்கப்பட்ட கொடும் தண்டனையாக பார்க்கிறோம் என்றார்.

- தினமலர் செய்தி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.