பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்புக்கான செயல்திட்டம்: தமிழக அரசுக்கு கல்வி அமைப்பு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 27, 2024

பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்புக்கான செயல்திட்டம்: தமிழக அரசுக்கு கல்வி அமைப்பு வேண்டுகோள்



பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்புக்கான செயல்திட்டம்: தமிழக அரசுக்கு கல்வி அமைப்பு வேண்டுகோள் Action Plan for Abolition of Caste in School and College Curriculum: Education Organization Appeal to Tamil Nadu Govt

சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை பள்ளி, கல்லூரி பாடத்திட்டம் வாயிலாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கல்வி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில், ‘பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு’ என்ற தலைப்பிலான கல்வி கருத்தரங்கமும், ‘சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்பு சட்டத்தின் பார்வையில்’ நூல் திறனாய்வும் சென்னை பல்கலைக்கழக மெரினா வளாக கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழ்ப் பேராசிரியை அரங்க.மல்லிகா பேசியது: ‘அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துவிட்டன.

ஆனால், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாதி ஒழிப்பு என்பது தொடக்கப்புள்ளியில் தான் உள்ளது. பாடத்திட்டத்தில் சமத்துவம், சமூக சிந்தனை கருத்துகளை இடம்பெறச் செய்ய வேண்டும். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் மார்க்சீயம், பெண்ணியம், பெரியாரியல், ஆதி திராவிடர் விடுதலை கருத்தியல்களை மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இதன்மூலம் சமூக மாற்றம் நிகழும். சாதியற்ற சமூகத்தை உருவாக்க வகைசெய்யும் கல்வி, பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்’ என்று பேசினார். பத்திரிகையாளர் கடற்கரய் மத்துவிலாச அங்கதம் பேசியது:

‘சாதி பிரச்சினையில் பட்டியல் இன மக்கள்தான் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில், ஜோதி ராவ் பூலேயும், அம்பேத்கரும், சமூக மாற்றத்துக்கு கல்வி என்ற பேராயுதத்தை கையில் எடுத்தனர். கல்வியால்தான் சமூக விடுதலை நிகழும். கல்வி இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமே இல்லை’ என்று பேசினார்.

வழக்கறிஞர் அருள்மொழி பேசியது:

‘ஆதிக்க சாதி உள்பட ஒவ்வொரு சாதியிலும் சாதி ஒழிப்புக்காக குரல் கொடுத்து அதற்காக பாடுபட்டவர்கள் பலர். அவர்களை எல்லாம் குழந்தைகளுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். சாதி ஒழிப்புக்கும், இடஒதுக்கீட்டுக்கும் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் ஆற்றிய பணிகள் ஏராளம்’ என்று கூறினார்.

முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பேசுகையில்,

‘சாதி ஒழிப்புக்காக நீண்ட காலமாக போராடி வரும் நிலையில் இன்றும் ஆணவ கொலைகள் நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது. சாதி ஒழிப்பு பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். கல்வி நிலையங்களால்தான் சாதியை கண்டறிந்து அதை களைய முடியும். எனவே, சாதி ஒழிப்பு பணியை கல்வி நிறுவனங்களில் இருந்து தொடங்குவோம். சாதி ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தி அதன்மூலம் அரசை வலியுறுத்த வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.