உயிரி தகவலியல் (Bio-Informatics) படிப்பும் பயன்களும்..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 2, 2024

உயிரி தகவலியல் (Bio-Informatics) படிப்பும் பயன்களும்..!



உயிரி தகவலியல் (Bio-Informatics) படிப்பும் பயன்களும்..! Bio-Informatics study and benefits..!

உயிரி தகவலியல் என்பது மூலக்கூறு உயிரியல் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியலைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் என்ற சொல்லானது 1979 ஆம் ஆண்டில் பாலின் ஹோக்வெக் என்பவரால் உயிரமைப்புகளின் தகவல் செயல்முறை குறித்த ஆய்வுக்காக உருவாக்கப்பட்டது.

உயிரி தகவலியல் தற்பொழுது தரவுத்தளங்கள், நெறிமுறைகள், கணக்கிடுதல் மற்றும் புள்ளியியல் தொழில் நுட்பங்கள், உயிரியல் தரவுகளினுடைய பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை ஆகியவற்றிலிருந்து தோன்றும் முறை சார்ந்த மற்றும் செயல்முறைச் சிக்கல்களை தீர்ப்பதற்கான கோட்பாடுகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், உருவாக்குவதற்கும் இன்றியமையாததாக விளங்குகின்றது. கடந்த காலங்களில் மூலக்கூறு ஆய்வுத் தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகள் இணைந்து மூலக்கூறு உயிரியல் சார்ந்த தகவல்களை அதிக அளவில் உருவாக்கியிருக்கின்றன. இந்த மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) சார்ந்த தகவல் தொழில்நுட்பப் படிப்புகளே உயிரி தகவலியல் (Bio-Informatics) படிப்புகளாக உள்ளன.

ஜீன்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் சார்ந்த தகவல்களை ஆராய்ந்து மேம்படுத்துவதிலும், கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மற்றும் சாஃப்ட்வேர் கருவிகளை உருவாக்குவதிலும் பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸ் துறையின் பங்கு அளப்பரியது. ஆகையால்தான் வருங்காலங்களில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் படிப்புகளில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக உயிரிதகவலியல் துறை கருதப்படுகிறது. உயிரியல், கணிதம், பொறியியல், புள்ளியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பல துறைகளை உள்ளடக்கிய துறையாதலால் இதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

பயலாஜிக்கல் தரவுகளை இமேஜ், சிக்னல் ப்ராசஸிங் என கணினி மொழியில் மாற்றி உயிரியல் சார்ந்த தகவல்களை நிர்வகிக்கவும், பயோமெடிக்கல் ஆராய்ச்சிகளுக்கும் மேலும்வேளாண்மை, சூழலியல், ஆற்றல்,சுகாதாரம் போன்ற துறைகளிலும் உயிரிதகவலியல் துறையின் பயன்பாடுகள் இன்றியமையாததாக உள்ளது. வழங்கப்படும் படிப்புகள்

பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் சார்ந்த மூன்று வருட கால அளவிலான இளங்கலைப் படிப்புகள், நான்கு வருட கால அளவிலான தொழில்நுட்பப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், முதுகலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் ஆகியவை இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டுவருகின்றன. இளங்கலைப் படிப்புகள்: B.Sc. in Bioinformatics, B.Tech in Bio-informatics, B.Sc. (Hons.) in Bioinformatics, BE in Bioinformatics, Certificate in Bioinformatics, Advanced Diploma in Bioinformatics

முதுகலைப் படிப்புகள் : இரண்டு வருட கால அளவிலான M.Sc. in Bioinformatics, M.Tech in Bioinformatics, PG Diploma in Bioinformatics, M.Sc. (Hons.) in Bioinformatics, MS in Bioinformatics, ME in Bioinformatics மற்றும் மூன்று முதல் ஐந்து வருட கால அளவிலான Ph.D in Bioinformatics ஆராய்ச்சிப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள்

பல்வேறு முன்னணி கல்விநிறுவனங்கள் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன. அவை...

* Indian Institute of Technology, Delhi

* Indian Institute of Technology, Kharagpur

* National Institute of Technology, Bhopal

* National Institute of Technology, Rourkela

* Jawaharlal Nehru University, New Delhi

* Bharati Vidyapeeth University, Pune

* Tamil Nadu Agricultural University, Tamil Nadu

* SASTRA University, Tamil Nadu

* Amity University, Uttar Pradesh

* Sathyabama University, Tamil Nadu

* Aryabhatta Knowledge University

* SRM University, Tamil Nadu

* Graphic Era University, Uttarakhand வேலைவாய்ப்புகள்

சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்த துறைகளில் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறையும் ஒன்று. ஏனெனில் அதன் அவசியம் அத்தகையது. மற்ற எந்தத் துறைகளை விடவும் மருத்துவத் துறைக்குத் தான் அதிமுக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது. உயிர்களை காக்கும் பொறுப்புணர்வும், கடமையும் மருத்துவத் துறைக்குத் தான் உள்ளது. அவ்வாறு தான் மருத்துவ உலகில் நம்ப இயலாத பல சாதனைகள் நடந்துவருகின்றன.

அதில் மரபணு எடிட் செய்யப்பட்ட குழந்தைகள் போன்ற நிகழ்வுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எனவே, மருத்துவம் மற்றும் அது சார்ந்த கிளைத் துறைகளிலும் ஆரோக்கியமான எதிர்காலம் உள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் உடற்கூறுகளின் தன்மைகள் குறித்து ஆர்வம் உள்ளவர்களுக்கு பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறை சிறந்த தேர்வாக அமையும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.