மார்ச் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 9, 2024

மார்ச் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு.



மார்ச் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு.

உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு.

திருவாரூர் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகத் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில், ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆழித்தேரோட்டம் அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டது. பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என ஆகம விதியாக கருதப்படுகிறது. அந்த வகையில் மார்ச் 21ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களில் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேயப்பட்டது. 7500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

தேரின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மரங்கள், துணி, அலங்காரப் பொருட்கள், குதிரைகள் என அனைத்தும் பிரம்மாண்டமான வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேரோட்டத்தில் தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். தேர்வடக்கயிறு 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா இவைகளைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோவில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது எனக் கூற இயலாது.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை உடையது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. மார்ச் 21ம் தேதியன்று ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதற்காக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தேரோட்டத்தின்போது கூட்டத்தை கண்காணிக்க தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கீழ வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இந்த 4 மாட வீதிகளிலும் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு செய்ய போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.