ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 2, 2024

ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை !



ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை ! Request for exemption from the teacher's qualification test!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 16.11.2012 வரை நிரந்தரப் பணியிடத்தில் நியமனம்பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனையுடன் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து, ஒரு தவிர்ப்பாணை வெளியிட தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திட பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களிடம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அதன் பொதுச்செயலாளர் சண்முகநாதன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில், “தமிழகத்தை பொறுத்தவரை முதல் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 2012 இல் தான் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஆகஸ்ட் 2012 இல் வெளியாகின. அதன் பின்னர் நவம்பர் 2012 – ல் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செயல்முறைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2012-ல் அதாவது 16 நவம்பர் 2012 இல் இருந்து தான் ஆசிரியர் தகுதித் தேர்வு இனி கட்டாயம் என்ற நிபந்தனையை நடைமுறைப்படுத்துவது என்பது தான் நியதியாக இருக்க முடியும். இதனால் தகுதித் தேர்வு தொடர்பாக புதிய வழக்குகள் எழுவதற்கும் வாய்ப்பில்லை.

குறிப்பாக இந்திய திருநாட்டில் பல மாநிலங்கள் 2012ல் இருந்து தான் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் மத்திய அரசு தேர்வு வாரியம் முதன்முதலாக 2012-ல் தான் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இத்தேதிக்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இச்சட்டத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் 16 நவம்பர் 2012 க்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் வழிகாட்டுதலுடன் பணியாற்றி வரும் இவ்வகை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்விலிருந்து விலக்களித்திட வேண்டும். இது குறித்து தமிழகஅரசுக்கும் பள்ளிக்கல்வித்துறை தக்க பரிந்துரை செய்து இவர்களின் வாழ்வாதாரம் காக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடைமுறைச் சிக்கல் காரணமாக, ”தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப் படுத்துவதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வந்த கல்வித்துறை சார்ந்த பணி நியமன வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி 16.11.2012 வரை நிரந்தரப் பணியிடத்தில் ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனையுடன் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளர் ஊதியம் , ஊக்க ஊதியம். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணி பதிவேடு தொடக்கம், பிரசவ விடுப்பு அனுமதிப்பு, தகுதிகாண் பருவம் நிறைவேற்றல், பணி வரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட இவர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருப்பதையும்” சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.