ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுக்கு குறைந்தது ஆர்வம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 24, 2023

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுக்கு குறைந்தது ஆர்வம்

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுக்கு குறைந்தது ஆர்வம்

சென்னை:அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவியில், 2,582 காலியிடத்துக்கு, 41,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஒரு காலியிடத்துக்கு, 16 பேர் மட்டுமே போட்டியிடும் நிலை உள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 2,582 காலியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அடுத்த மாதம், 7ம் தேதி நடக்க உள்ளது. எண்ணிக்கை குறைவு பட்டப்படிப்புடன் பி.எட்., தேர்ச்சி பெற்று, ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம், 41,478 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு காலியிடத்துக்கு, 16 பேர் போட்டி போடும் நிலை உள்ளது.

ஏற்கனவே, 5,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, 1.5 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர்.

அதேபோல், ஆசிரியர் வேலை பார்க்க, பி.எட்., முடித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். இதை கணக்கிட்டால், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆர்வம் குறைந்தது ஏன்?

இது குறித்து, 2013 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி கூறியதாவது:

இதுவரை, 1.5 லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் பலர், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதியவர்கள் ஆவர். ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கு முன், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; ஆசிரியர் வேலையை எதிர்பார்த்தே, 40 வயதை தாண்டி விட்டனர்.

இந்நிலையில், ஆசிரியர் பணிக்கு புதிதாக போட்டி தேர்வு எழுத வேண்டும் என அறிவித்துள்ளதால், அதற்கு பயிற்சி பெறும் நிலையில், நாங்கள் இல்லை. இளைய தலைமுறையினரும், ஆசிரியர் பணிக்கு ஆர்வம் காட்டுவது குறைவாக உள்ளது.

கடந்த காலங்களில், தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே வைத்து, நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தி.மு.க., அரசு தான் போட்டி தேர்வை புதிதாக அறிவித்து, அதை பிடிவாதமாக நடைமுறைப்படுத்துகிறது. வேறு எந்த மாநிலத்திலும், இந்த தேர்வு கிடையாது. அதுமட்டுமின்றி, பட்டப்படிப்பில், 45 சதவீதத்துக்கு குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும், பல ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனங்கள் நடக்காததால், பி.எட்., தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கானவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை கூட எழுதாமல், மற்ற அரசு பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகின்றனர்.

எனவே, பட்டதாரிகளின் இந்த மனநிலையை கருதியாவது, போட்டி தேர்வை ரத்து செய்து விட்டு, தகுதி தேர்வு தேர்ச்சி அடிப்படையில், நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.