அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த வழக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 6, 2023

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த வழக்கு



A case for implementation of breakfast program in government aided schools - அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவன். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி சுமார் 31,000 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் உள்ளது. மேலும் மதிய உணவு திட்டத்தில் பயன் பெறுவதற்காகவே ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

ஆனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்ட கடலோர பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லை.

மீன்பிடிக்க செல்கின்றனர்

கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏழ்மையின் காரணமாக மீனவ சமுதாய குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவ மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகும்.

எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழக அரசு காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசாணை

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், கலைமதி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என அரசாணை உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தனியார் பள்ளியாக இருந்தாலும் அரசு நிதி உதவியில்தான் இயங்குகிறது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

விளக்கம் பெற உத்தரவு

அதனைத்தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.