அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் வேகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 27, 2023

அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் வேகம்



அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் வேகம்

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் 100 சதவீதம் நிறைவேற்றியதாக கூறியதால் அரசு சங்கங்கள் அடுத்தடுத்து போராட்டத்தை அறிவித்து வருகின்றன. சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கமும் காதில் பூ சூடும் போராட்டம் அறிவித்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்துவோம் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் நுாறு சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சமீபத்தில் முதல்வர் அறிவித்தார். இதையடுத்து பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் ஊதிய முரண்பாடுகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். நாளை (செப். 29 ) தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. செப்.29, 30 ல் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. அக்.9 ல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் காதில் பூ சூடும் போராட்டம் நடத்த உள்ளது.

அக்.13 ல் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ( டிட்டோ ஜாக்) 1,2,3 வகுப்புகளில் ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அக். 20, 21 ல் பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளன. சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. போராடினால் கூட முறையான பதில் இல்லை. அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 70 ஆயிரம் கோடியை தவறான முறையில் கையாண்டு வருகின்றனர்.

தேனியில் வருவாய் துறை ஊழியர் ஒருவர் மூளைச்சாவு காரணமாக இறந்தார். அவருக்கான பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அரசின் செயல்பாடு இதே நிலையில் இருந்தால் இதன் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.