இடியாப்ப சிக்கலில் CEO இடமாறுதல் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 24, 2023

இடியாப்ப சிக்கலில் CEO இடமாறுதல் உத்தரவு



இடியாப்ப சிக்கலில் CEO இடமாறுதல் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையில் சி.இ.ஓ. இடமாறுதலுக்கு அடுத்தடுத்து இரு ஆணைபிறப்பிக்கப்பட்டும் சி.இ.ஓ. சுமதி எங்கு பொறுப்பேற்பது என தெரியாமல் மருத்துவ விடுப்பில் உள்ளார். கரூர் மாவட்ட சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து விலகாததால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் ஆக., 11ம் தேதி ஆறு மாவட்ட சி.இ.ஓ.க்களுக்கு நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர் சி.இ.ஓ. பாலமுரளி கோவைக்கும் கோவை சி.இ.ஓ.சுமதி ராணிப்பேட்டைக்கும் ராணிப்பேட்டை சி.இ.ஓ. உஷா திருப்பூருக்கும் மாற்றப்பட்டனர். இதில் ராணிப்பேட்டை சி.இ.ஓ. உஷா மாறுதலில் செல்ல மறுத்துவிட்டார். அம்மாவட்ட கலெக்டர் வளர்மதி சி.இ.ஓ. உஷாவை பணியில் இருந்து விடுவிக்க முடியாதென தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அப்பணியிடத்திற்கு கோவையில் இருந்து சென்ற சி.இ.ஓ. சுமதி பொறுப்பேற்காமல் திரும்பிவிட்டார். இதற்கிடையில் திருப்பூர் சி.இ.ஓ. பாலமுரளியும் பணியில் இருந்து விடுவித்து கொண்டு கோவையில் பொறுப்பேற்காமல் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து ஆக., 21ம் தேதி இரவு சி.இ.ஓ. இடமாறுதலுக்கு மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் கரூர் சி.இ.ஓ. திருப்பூருக்கும் கோவையில் இருந்து பணி விடுவித்து கொண்ட சி.இ.ஓ. சுமதி கரூருக்கும் மாறுதல் வழங்கப்பட்டது. இதோடு கோவையில் சி.இ.ஓ. பாலமுரளியும் 22ம் தேதி பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கரூர் சி.இ.ஓ. கீதாவை அம்மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பணியில் இருந்து விடுவிக்க முடியாதென தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சி.இ.ஓ. கீதா பணியில் இருந்து விடுவித்து கொள்ளவில்லை. இச்சிக்கலால் சி.இ.ஓ. சுமதி எந்த மாவட்டத்திற்கு சென்று பொறுப்பேற்பது என்றே தெரியாமல் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பிப்பதும் சி.இ.ஓ.க்கள் பணி விலக மறுப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக மாறுதல்நடவடிக்கைகளில் கலெக்டர் தலையீடு இருப்பது கல்விசார் பணிகளில் சிக்கலை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.