TNSE - JACTO : கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வரும் தமிழக அரசைக் கண்டித்து ஆசிரியர்களின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நாள்: 28.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 24, 2023

TNSE - JACTO : கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வரும் தமிழக அரசைக் கண்டித்து ஆசிரியர்களின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நாள்: 28.07.2023

TNSE - JACTO - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு

கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வரும் தமிழக அரசைக் கண்டித்து ஆசிரியர்களின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

இடம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலக வளாகம், சென்னை

நாள்: 28.07.2023, வெள்ளிக்கிழமை, காலை 11 மணி

ஆசிரியப் பேரினமே!

அணிதிரண்டு வாரீர்!

அன்பார்ந்த ஆசிரியர் பேரினமே! உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்போம் என்று உறுதி கூறி அவைகளைத் தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த வாக்குறுதிகளில், ஒரு எள் அளவு கூட, எள் முனை அளவு கூட, ஏன் அணு அளவு கூட இன்றுவரை நிறைவேற்றித்தராத அரசாகவே நம் முன்னால் காட்சியளிப்பது நமக்கு மிகுந்த மன வேதனைகளையும், ஆழ்ந்த வருத்தத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே இன்னும் இந்த அநீதிகளையும், நம்மை அணு அளவும் கண்டுக்கொள்ளாத அரசின் அலட்சியப் போக்கையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கொதித்தெழுந்து வீதிக்கு வந்து விட்டோம்! அமைதியான முறையில் கோரிக்கைகளை வென்றெடுக்க இருந்த அனைத்து வழிகளையும் இன்றைய அரசு அடைத்து மூடிவிட்டக் காரணத்தால் ஆவேசமாக கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் எனும் ஆயுதத்தை கையில் ஏந்தி வீதிக்கு வந்துவிட்டோம்.

மேலும் காலம் தாழ்த்தாமல் எங்களின் கீழ்காணும் வாழ்வாதாரக் கோரிக்கைகளை - விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசையும், பள்ளிக் கல்வித்துறையையும் வற்புறுத்துவதற்காக 28.07.2023 வெள்ளிக்கிழமை காலை மிகச்சரியாக 11 மணிக்கு, சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.

அந்த மகத்தான ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஆசிரியச் சமுதாயமே அணி திரண்டு வருக! ஆர்பரித்து வருக, ஆவேசக் குரல் எழுப்பி, ஆவேசமாய் வருக! அனைத்து ஆசிரியப் பெருமக்களையும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அணி திரட்டி வருக என உங்கள் அனைவரையும் ஜேக்டோ சார்பில் இருகரம் கூப்பி - அழைக்கின்றோம் வாரீர்.

அரசுக்கு நாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்

1. தமிழக அரசே! ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திடுக.

2 (அ) ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்கிடுக.

(ஆ) உயர்கல்வித் தகுதிக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திடுக.

(இ) அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும், தொகுப்பூதிய ஆசிரியர்களையும் முழுநேர ஆசிரியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிடுக. 3. தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நாள் 16.11.2012. ஆகவே அத்தேதிக்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளித்திடுக.

4. பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அவர்களது பணிக்காலத்தை (Seniority) மட்டுமே தேவையான தகுதியாகக் கொள்ள வேண்டுமே தவிர ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறவேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக நிராகரித்து. அதற்குத் தேவையான சட்ட விதிமுறைகளை உருவாக்கிடுக.

(அ) பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான விபரங்களையும், புள்ளி விவரங்களையம் EMISல் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யவேண்டியிருப்பதால் - அவை ஆசிரியர்களின் கற்பித்தல் பணியையும், மாணவர்களின் கற்றல் பணியையும் மிகக் கடுமையாக பாதித்து வருகின்றன. ஆகவே EMIS பணிகளை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமித்து, பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் பணிகள் தங்குதடையின்றி நடைபெற்றிட கல்வித்துறையே ஆவன செய்திடுக.

5. (அ) பள்ளிக் கல்வித்துறையில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிடுக.

(ஆ) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசுநிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிடுக. 6. சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், காலியாக இருக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பிடுக.

7. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை உருவாக்கிடுக.

8. (அ) 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் பணி நியமன நாளில் இருந்து பணிவரன்முறை செய்திடுக. (ஆ) ஆசிரியர் - அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களையும், இதரப்படிகளையும் மாற்றி உயர்த்தி அமைக்க, ஊதியக் குழுவை மத்திய மாநில அரசுகளே உடனடியாக அமைத்திடுக.

9. (அ) தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்விக்கென்று தனியாக ஒரு இயக்குநரகத்தை அமைத்திடுக. (ஆ) மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்களை அமல்படுத்தாத ஆசிரியர் பிரிவுக்கு விரைந்து அமல்படுத்திடுக.

10.ஒவ்வொரு ஆண்டும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்று மாண்புமிகு கலைஞர் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்திடுக. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட ஆவன செய்திடுக. அதுவரை அவர்களுக்கு சிறப்பூதியம் வழங்கிடுக.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.