மாநில சுயாட்சி பேசும் தமிழ்நாடு பென்சன் திட்டத்தில் தடுமாறலாமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 26, 2023

மாநில சுயாட்சி பேசும் தமிழ்நாடு பென்சன் திட்டத்தில் தடுமாறலாமா?



மாநில சுயாட்சி பேசும் தமிழ்நாடு பென்சன் திட்டத்தில் தடுமாறலாமா?



தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2003 ஏப்ரல் முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதை எதிர்த்து ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தி.மு.க. 2021 தனது தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம் என உறுதி அளித்ததன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகளை அதிகமாக பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசு தடுமாற்றம் அடைவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் கூறியதாவது

தமிழ்நாட்டில் குடிமைப் பணிகள் ஒழுங்கு முறைகள் 1889ன் படி மாநில அரசின் ஓய்வூதிய திட்டம் நிர்வகிக்கப்பட்டு கடந்த காலத்தில் மெட்ராஸ் ஓய்வூதிய சட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு பதிலாக 1979 ஜனவரி முதல் தமிழ்நாடு ஓய்வூதிய விதிமுறைகள் 1978 ன் கீழ் 2003 மார்ச் வரை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகுதான் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டம் 2004 ஜனவரி முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு முன்னதாகவே 2003 ஏப்ரல் மாதத்திலேயே நடைமுறை படுத்தப்பட்டுவிட்டது. இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் இத்திட்டத்தில் இணைந்து உள்ளனர். சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் இறப்பு, பணி நிறைவு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். ஊழியர்களின் பங்களிப்பாக சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டு எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவோம் என உறுதி அளித்ததன் அடிப்படையில் இன்றைய அரசிற்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மிகுந்த ஆதரவை அளித்தனர்.

இந்நிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அவர்களின் ஊடக பேட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசு சில திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அமுல்படுத்துவோம் என்று கூறுவது மாநில சுயாட்சியை உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு நேர் எதிரானதாகும். இது மிகுந்த ஐயத்தை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் பழைய பென்ஷன் திட்டத்திற்கு திரும்பி விட்ட நிலையில், ஊழியர்களின் பங்களிப்பு தொகையை ஓய்வூதிய நிதி ஒழுக்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தாமலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் இருக்கும் தமிழ்நாடு அரசிற்கு தயக்கம் ஏன் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் உட்பட மற்ற மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் (என்.பி.எஸ்.) இணைந்து விட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்கள் மட்டும்தான் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் (சி.பி.எஸ்.) உள்ளனர். எனவே ஒன்றிய அரசிலோ அல்லது ஆந்திர மாநிலத்திலோ மேற்கொண்டு வரும் திருத்தங்கள் நமக்கு எவ்விதத்திலும் பலனளிக்காது. எனவே மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

நிதியமைச்சர் மாறினாலும் எங்கள் நிலைமை மாறவில்லை என்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூற்றை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு மாற்றி காட்டுவார் என்ற நம்பிக்கை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.