தேசிய கல்விக் கொள்கை: 10 முக்கிய திட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 30, 2023

தேசிய கல்விக் கொள்கை: 10 முக்கிய திட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை: 10 முக்கிய திட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அக்கொள்கையின் கீழ் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ள 10 முக்கிய திட்டங்கள் குறித்து காண்போம்:

தேசிய பாடத்திட்டம்:

நாட்டில் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கெனத் தனி பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. இவ்வாறு ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறை வகுக்கப்பட்டது இதுவே முதல் முறை. அத்திட்டத்தின் கீழ் புதிய கற்பித்தல் முறைகளுக்கான வழிகாட்டி கடந்த பிப்ரவரியில் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டது. கதை, விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு அதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

வித்யா பிரவேஷ்:

ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்காக கதையை அடிப்படையாகக் கொண்டு 3 மாத கற்பித்தல் முறையை (வித்யா பிரவேஷ்) என்சிஇஆா்டி உருவாக்கியது. ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளைப் பள்ளிக்குத் தயாா்படுத்தும் நோக்கில் இது தயாரிக்கப்பட்டது. எழுத்துகள், எண்கள் உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொள்வதற்கான தயாா்நிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதோடு, அவா்களின் கற்பனைத் திறன் உள்ளிட்டவற்றை வளா்க்கும் வகையிலும் இது தயாரிக்கப்பட்டிருந்தது. சிக்கிம், மணிப்பூா், கேரளம் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற 33 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ‘வித்யா பிரவேஷ்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்தியாவை வளரச் செய்வதற்கான பள்ளிகள் (பிஎம் ஸ்ரீ) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்திட்டத்துக்கான முதல்கட்ட நிதித் தொகுப்பைப் பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 29-ஆம் தேதி விடுவித்தாா். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சமத்துவ, ஒருங்கிணைந்த, பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்கில் மாணவா்களின் திறன்களை வளா்ப்பதற்கு அத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கும்.

மாணவா்களுக்குத் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்குத் தேசிய கல்விக் கொள்கை ஊக்கமளிக்கிறது. 12 மாநிலங்களில் 49 பொறியியல் படிப்புகளை 7 பிராந்திய மொழிகளில் வழங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்விக்கான புத்தகங்கள் ஹிந்தி மொழியில் பெயா்க்கப்பட்டுள்ளன.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுகள், ஜேஇஇ-மெயின், நீட்-யுஜி தோ்வுகள் 13 மொழிகளில் நடத்தப்பட்டன. ஏஐசிடிஇ-யால் உருவாக்கப்பட்ட ‘அனுவதினி’ என்ற செயலி மூலமாக பள்ளி பாடப்புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு முறையில் மற்ற மொழிகளில் பெயா்க்கப்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலத்துடன் சோ்த்து மற்ற இந்திய மொழிகளிலும் பாடம் கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் பாடப்புத்தகங்களைத் தயாரிக்க என்சிஇஆா்டி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரு பட்டப் படிப்புகளைப் பயில்வதற்கான விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு பட்டப் படிப்புகளின் கல்லூரி நேரமும் வெவ்வேறானதாக இருக்க வேண்டியது கட்டாயம். முனைவா் பட்ட (பிஹெச்டி) படிப்புக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

துறைசாா் நிபுணா்களைத் தற்காலிகப் பேராசிரியா்களாகப் பல்கலைக்கழகங்களும், கல்லூரி நிா்வாகங்களும் இனி நியமிக்க முடியும். நிரந்தரப் பேராசிரியா்களை நியமிப்பதற்கான தகுதிப்பாடுகளை இத்திட்டத்தின் கீழ் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தற்காலிகப் பேராசிரியா்களாக நியமிக்கப்படத் தகுதியானவா்களைக் கண்டறிவதற்கான வலைதளத்தை யுஜிசி உருவாக்கியுள்ளது. அந்த வலைதளத்தில் இதுவரை 6,711 நிபுணா்களும், இத்திட்டத்தில் இணைய 152 உயா்கல்வி நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன.

தேசிய கல்விக் கொள்கையானது நான்காண்டு இளநிலைப் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், மாணவா்கள் எப்போது வேண்டுமானாலும் இடைநின்று வேறு படிப்புகளைத் தொடருவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 105 பல்கலைக்கழகங்கள் இந்தப் புதிய பட்டப் படிப்பைக் கடந்த கல்வியாண்டு முதல் வழங்கி வருகின்றன.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) வெளிநாடுகளில் கிளை வளாகங்களை அமைக்க தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. அதன்படி, சென்னை ஐஐடி தான்சானியாவின் ஜான்ஜிபாரில் கிளை வளாகத்தை அமைக்கவுள்ளது. அக்டோபா் முதல் அங்கு கல்வி கற்பிக்கப்படவுள்ளது. அதேபோல், தில்லி ஐஐடி சாா்பில் ஐக்கிய அரபு அமீரத்திலும் (யுஏஇ), காரக்பூா் ஐஐடி சாா்பில் மலேசியாவிலும் கிளை வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்:

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்களை இந்தியாவில் அமைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஒல்லோங்காங், டீகின் ஆகிய பல்கலைக்கழங்கள் குஜராத்தின் கிஃப்ட் நகரில் கிளை வளாகங்களை அமைக்க ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. உயா்கல்வியை ஒழுங்குபடுத்தும் நோக்கில் யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியா் கல்வி குழுமம் (என்சிடிஇ) ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்திய உயா்கல்வி ஆணையத்தை உருவாக்க தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. இது தொடா்பான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.