தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO) சுற்றறிக்கை - நாள் : 12.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 13, 2023

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO) சுற்றறிக்கை - நாள் : 12.07.2023



தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO) சுற்றறிக்கை - நாள் : 12.07.2023 Tamil Nadu Department of School Education - Confederation of Teachers' Organizations (TNSE-JACTO) Circular - Dated : 12.07.2023

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO) சுற்றறிக்கை எண்.1

நாள் : 12.07.2023

கூட்டமைப்பு கூட்ட முடிவுகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் / உயர்மட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 09.07.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு திருச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அ.மாயவன் முன்னிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.S.சங்கரபெருமாள் மற்றும் திரு. T.உதயசூரியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அ.சங்கர் - வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. T.கனகராஜ் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

1. திரு.M.இரவிச்சந்திரன் (மாநிலத் தலைவர், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்)

2.திரு.அ. மாயவன், திரு. S.சேதுசெல்வம், திரு. M.குமரேசன், திரு. கோபிநாதன் (தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்)

3. திரு. பேட்ரிக் ரெய்மாண்ட், திரு.ஜான்கென்னடி (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு)

4. திரு. T.உதயசூரியன் (பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் & தமிழாசிரியர் கழகம்)

5. திரு. A. சங்கர், K.தியாகராஜன், K.S.பிரகாசம், S.இராதாகிருஷ்ணன் (தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்)

6. திரு. K.செல்வக்குமார் (தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்கம்)

7. திரு. S.சங்கரப்பெருமாள் (தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்)

8. திரு.N.இராகவன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்)

9. திரு. A.அமலராஜன், T.கனகராஜ், சிவஸ்ரீ ரமேஷ் (தமிழ்நாடு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு)

10. திரு. C.பன்னீர்செல்வம் (பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்)

11. திரு. P.ஆரோக்கியதாஸ் (தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்

12.திரு.எஸ்.பி.பழனிவேல் & சு.சுரேஷ்குமார் (தமிழ்நாடு அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கழகம்)

தவிர்க்க முடியாத பணிச்சுமை காரணமாக கலந்துகொள்ள முடியாமல் போன சங்கங்கள் (1) தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (2) தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் (3) தமிழாசிரியர் கழகம் (4) கணிணி ஆசிரியர் கழகம் இவைகளின் பொறுப்பாளர்கள் நம்மிடம் கூறியவை "தவிர்க்க முடியாத பணிச்சுமை காரணமாக இந்தக் கூட்டத்தில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை, அதே நேரத்தில் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நாங்களும் ஏற்று, விரைந்து அமல்படுத்துவோம்" என்று கூறி நம்மை எல்லாம் உற்சாகப் படுத்தியுள்ளனர்.

நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

தீர்மானம் 1: தொடக்கக் கல்வித் துறையிலும் பள்ளிக்கல்வித் துறையிலும் இருக்கக் கூடிய அனைத்து ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களையும் சங்கத்திற்கு மூவர் கடந்த மாத இறுதியில் அழைத்து, இரவு மணி 1 வரையிலும் எவ்வித தளர்ச்சியும் இல்லாமல் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும், இன்முகத்தோடு கேட்டறிந்த நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை இப்பொதுக்குழு மனதார வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறது.

தீர்மானம் 2 : அதே நேரத்தில், அனைத்து சங்கப் பொறுப்பாளர்களும் - முன்வைத்த மிக முக்கியமான கோரிக்கைகளில் இன்றுவரை ஒன்றைக் கூட நிறைவேற்றாத அலட்சியப் போக்குதான் பள்ளிக்கல்வித் துறையில் மையம் கொண்டிருக்கிறது என்பதை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் கனிவான கவனத்திற்கு மிகுந்த கவலையுடன் கொண்டு செல்வது என்றும் இக்கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. தீர்மானம் 3 : இன்றைய தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கக் கூடியவர்கள்; சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது, அவர்கள் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் இன்றுவரை ஒன்றைக் கூட நிறைவேற்றாத அவல நிலைதான் நீடித்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப் படவில்லை; நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் இன்றுவரை வழங்கப்படவில்லை; பறிமுதல் செய்யப்பட்டுள்ள உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய உயர்கல்விக்கான ஊக்க ஊதியத் திட்டத்தை மீண்டும் இன்றுவரை வழங்கவில்லை;

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு - நடைமுறைக்கு வந்த நாள் 16.11.2012 தான்.

அதற்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட தனியார் பள்ளி, அரசுப் பள்ளி -ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதை இன்று வரை செய்யாமல் சுமார் 1500 தனியார் பள்ளி ஆசிரியர்களை பழிவாங்கும் போக்கை தமிழக அரசு இன்றுவரை கடைபிடித்து வருகிறது.

தற்போது மேலும் ஒரு அணுகுண்டை ஆசிரியர்கள் தலையில் போட முயல்கிறார்கள். அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வில் - தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு வழங்கப்படும் என்ற அணுகுண்டு தான் அது.

28.07.2023 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஆகவே மேற்கூறிய இந்த அநீதிகளை எல்லாம் களையக் கோரியும்; ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொடுத்த தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் 28.07.2023 அன்று காலை 11.00 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் நமது பள்ளிக் கல்வித்துறை ஜேக்டோ (TNSE - JACTO) சார்பில் சுமார் 2000 ஆசிரியர்களை அணி திரட்டி ஆவேசமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட, தமிழகம் முழுவதிலுமிருந்து ஆசிரியர்களை அணி திரட்டிடும் அரும் பணியில், அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைத்து சங்கப் பொறுப்பாளர்களும் பணியாற்றிட வேண்டும் என்று இக்கூட்டமைப்பு வேண்டுகிறது. கூட்டமைப்பு தொடர்பான தீன்மானங்கள்

தீர்மானம் 4 (அ) : நமது இந்த கூட்டமைப்பை இன்னும் வலிமையாகவும் பொலிவாகவும் ஆக்கிடவும், 28.07.2023 அன்று நடைபெறும் சென்னை ஆர்ப்பாட்டத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்திடவும், பெருந்திரள் ஆர்ப்பாட்டமாக மாற்றிக் காட்டிடவும், நமது "பள்ளிக்கல்வித் துறை ஜேக்டோ" (TNSE - ஜேக்டோ விற்கு அனைத்து மாவட்டங்களில் வலுவான மாவட்ட அமைப்புக்களை உருவாக்கிடும் பணிகளை நமது ஜேக்டோ TNSE இன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 18.07.2023 அன்று மாலை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்-4(ஆ): ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நமது ஜேக்டோவின் மாநில பொறுப்பாளர்கள், அந்த மாவட்டத்தில் நமது கூட்டமைப்பில் இணைந்துள்ள பிற சங்கப் பொறுப்பாளர்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு 18.07.2023 அன்றைய மாவட்ட TNSE - ஜேக்டோ கூட்டத்தை மிகச்சிறப்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடத்திட வேண்டும். சங்கத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்திட வேண்டும். இவர்களில் மாவட்டங்களில் நடைபெறும், மாவட்ட JACTO - TNSE - கூட்டங்களுக்கு அழைப்பு அனுப்புவற்கென்று ஒருவரையும், மற்றொருவரை நிதிக் காப்பாளராகவும் நியமித்திட வேண்டும்.

தீர்மானம் -5: மேற்கூறியவாறு அமைக்கப்படும் மாவட்ட ஜேக்டோ - TNSE - 28.07.2023 அன்று சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும் நமது எழுச்சி மிகு ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளாக - ஆசிரியர்களை திரட்டி வருவதற்கு தேவையான அனைத்துப் பணிகளையும் விரைந்து மேற்கொண்டிட வேண்டுகிறோம்.

தீர்மானம் -6 : இணைப்பு சங்கங்கள் ஒவ்வொன்றும் மிக கடுமையான முயற்சியினை மேற்கொண்டு, 28.07.2023 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெறும் நமது மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளான ஆசிரியர் பெருமக்களை அணிதிரட்டி வருமாறு அன்புடன் அனைவரையும் வேண்டுகிறோம். ஆர்பாட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் (கோரிக்கைகள் உள்ளிட்டவை) மிக விரைவில் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இவண்,

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின்

கூட்டமைப்பு (TNSE-JACTO)


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.