CBSE பள்ளிகளில் 22 பயிற்று மொழிகள்: பாடப் புத்தகங்களை NCERT உருவாக்கும் - தர்மேந்திர பிரதான் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 24, 2023

CBSE பள்ளிகளில் 22 பயிற்று மொழிகள்: பாடப் புத்தகங்களை NCERT உருவாக்கும் - தர்மேந்திர பிரதான்

CBSE பள்ளிகளில் 22 பயிற்று மொழிகள்: பாடப் புத்தகங்களை NCERT உருவாக்கும் - தர்மேந்திர பிரதான்

மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழ் உள்பட 22 இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

22 மொழிகளில் பாடப்புத்தகங்கள்

சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிகளில் இந்தி, ஆங்கில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், தொழில் திறன் சார்ந்த படிப்புகள் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, ஆங்கில மொழியுடன் சேர்த்து கற்றல்-கற்பித்தல் செயல்முறைகளை தொடங்குவதற்கும், தேர்வுகளை நடத்துவதற்கும் தயாராகி வருகின்றன. உயர்கல்வியில் இந்த நிலை இருக்கும்போது, அதனை அடிப்படை பள்ளிக்கல்வியிலும் கொண்டு வரும் நோக்கில் தற்போது சி.பி.எஸ்.இ. நிர்வாகம் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. அதன்படி, மாணவர்களின் தாய்மொழியில் கவனம் செலுத்த ஏதுவாக தமிழ் உள்பட 22 இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக இறங்கி இருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்து இருக்கிறது.

அடுத்த கல்வியாண்டில்...

மாணவர்களுக்கு பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், அறிவாற்றல் நன்மைகளையும் வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கையின்படி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. (கல்விகள்) இயக்குனர் ஜோசப் இம்மானுவேல், சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின்கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், இந்திய மொழிகள் மூலம் கல்வியை நடைமுறைப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மிக முக்கியமானது.

22 இந்திய மொழிகள் மூலம் புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்க என்.சி.இ.ஆர்.டி.க்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனை என்.சி.இ.ஆர்.டி. தீவிரமான பணியாக கையில் எடுத்துள்ளது. இதனால் 22 மொழிகளில் பாடப்புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். இந்திய மொழிகள்

தொழில்நுட்பம், மருத்துவம், தொழில்திறன், சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளில் பாடப்புத்தகங்கள் இந்திய மொழிகளில் வருகின்றன. உயர்கல்வி இந்த பணியை தொடங்கியதில் இருந்து, பள்ளிக்கல்வி அதன் அடித்தளமாக மாற வேண்டும் என்ற அடிப்படையிலும், பயிற்று மொழி அணுகுமுறை பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துடன் இணைந்த பள்ளிகள் இந்திய அரசியல் அமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்திய மொழிகளை பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பாராட்டு

இதுகுறித்து மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தன்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில், 'பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வியை ஊக்குவிப்பது பாராட்டுக்குரிய நடவடிக்கை' என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.