சாலை ஆய்வாளர் பணி - TNPSCக்கு ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 10, 2023

சாலை ஆய்வாளர் பணி - TNPSCக்கு ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு

சாலை ஆய்வாளர் பணி - TNPSCக்கு ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு - Road Inspector Job - ICourt Branch Key Order to TNPSC

சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே தகுதி: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களை மட்டுமே தகுதியாக கருத வேண்டும் என, டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அமுதவாணன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜன.13ல் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து கட்டாயம் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும், ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள், சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விதிகளுக்கு முரணானது. சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ படிப்பு கட்டாயம் என நிர்ணயிக்கப்பட்டதற்கு மாறாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், ஐடிஐ மட்டும் முடித்தவர்களுக்கு அரசு பணி வாய்ப்பு பறிபோகும். எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் சேவை நிபந்தனை சட்ட விதிகளின்படி, சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ முடித்தவர்களே தகுதியானவர்கள் என்பதால், டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சாலை ஆய்வாளர்களாக டிப்ளமோ, சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களை நியமிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெறாமல், நேரடியாக டிப்ளமோ மற்றும் சிவில் இன்ஜியரிங் படித்தவர்களை பரிசீலிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உயர் கல்வித்தகுதி உடையவர்கள் நியமன நடைமுறையில் பங்கேற்பது விதிக்கு மாறானது. தமிழ்நாடு அரசு பணியாளர் (பணியாளர் நிபந்தனைகள்) சட்டத்தின் கீழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை கவனிக்க தவறியுள்ளனர். அரசாணைப்படி, நேரடி நியமன சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ (சிவில் வரைவாளர்) சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். இதோடு டிப்ளமோ மற்றும் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை இருக்கலாம். விதிப்படி ஐடிஐ சான்றிதழ் என்பது கட்டாயம். முன்னுரிமை என்பது ஒரே தகுதியுடைய ஒன்றுக்கு மேற்பட்ேடார் இருக்கும்போது, டிப்ளமோ மற்றும் சிவில் இன்ஜியரிங் முடித்தவர்கள் முன்னுரிமை பெற முடியும்.

ஆனால், இவர்கள் முதலில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி என்பது அதிகபட்ச கல்வித் தகுதியாகும். ஆனால், ஐடிஐ சான்றிதழ் என்பது அத்தியாவசிய கல்வி தகுதியாகும். இந்த விவகாரத்தில் தெளிவான முரண்பாடு உள்ளது. சிறப்பு விதிகள் ஐடிஐ சான்றிதழ் இருக்க வேண்டும் என்கிறது. எனவே, சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களையே தகுதியாக கருத வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.