மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து நடவடிக்கை தேவையற்றது: அன்புமணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 27, 2023

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து நடவடிக்கை தேவையற்றது: அன்புமணி

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து நடவடிக்கை தேவையற்றது: அன்புமணி De-recognition of medical colleges unnecessary: Anbumani

தமிழகத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை கடுமையானது; அளவுக்கு அதிகமானது; தேவையற்றது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ஸ்டான்லி, தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது; குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட  சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை  தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது.  தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது; அளவுக்கு அதிகமானது; தேவையற்றது ஆகும்.

தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில்  விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது,  கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யபட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 கைரேகை வழியான வருகைப் பதிவேடு, கண்காணிப்பு காமிராக்கள்  ஆகியவற்றை தேசிய மருத்துவ ஆணையம் கட்டாயமாக்கியிருப்பதன் காரணத்தை நான் அறிவேன்; அது நியாயமானதும் கூட.

 ஆனால்,  இதுகுறித்த இந்திய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கைக்கு  தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்தும் கூட, அங்கீகாரத்தை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யபட்டுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளும் புகழ்பெற்றவை.  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியும் மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்தவை. இந்தியாவில் மிகச்சிறப்பான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கல்லூரிகளில் குறிப்பிடத்தக்கவை.  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் கல்லூரி ஆகும்.

 இந்தக் கல்லூரிகளில் மொத்தமாக 500 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.  மிக எளிதாக சரி செய்து விடக் கூடிய குறைகளை காரணம் காட்டி, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் அது தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை வழங்குவதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரி செய்யும்படி தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும்,  இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது.  

தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு.

எனவே, சம்பந்தப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடனடியாக சரி செய்து, இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின்  முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.

3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2023-24ஆம் கல்வியாண்டில் 500 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை  தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.