மாநில கல்விக்கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

மாநில கல்விக்கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்

மாநில கல்விக்கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்

தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் பரிசீலிக்கவில்லை. தமிழ்நாடு அரசு கல்விக் கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று மாநில கல்விக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள், சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி, பதிவாளர் ஏழுமலை ஆகியோருடன் மாநில கல்விக் கொள்கை தொடர்பாக சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு கல்விக் குழுவின் உறுப்பினர் முன்னாள் துணை வேந்தர் ஜவகர்நேசன் கூறியதாவது: தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்கும் குழு ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டுள்ளது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 5 பல்கலைக்கழகங்கள், 15 கல்லூரிகளில் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து கருத்து கேட்டு முடிவு செய்தோம்.

சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றிலும் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்து கருத்து கேட்டுள்ளோம். தமிழ்நாட்டுக்கான தனிக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்குத்தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் பரிசீலிக்கவில்லை. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி உருவாக்கப்பட்டு வரும் கல்விக் கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த கருத்து கேட்பு மீதான அறிக்கை, வரும் ஜூன் மாதத்துக்குள் உருவாக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கால தாமதமாகும் பட்சத்தில் தமிழ்நாடு அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்கப்படும். தேசியக் கல்வி கொள்கையின்படி மாநில கல்விக் கொள்கை இருக்கவேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறவில்லை. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் படித்து பெறும் பட்டத்தை 4 ஆண்டுகளாக படிக்க வேண்டும் என்று கூற முடியாது. தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாநிலங்களில் சென்று படிப்பதில் பாதிப்பு இல்லாத வகையில் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்படும். பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.