‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளை சென்று பார்க்க ஏற்பாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 14, 2023

‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளை சென்று பார்க்க ஏற்பாடு

கல்லூரிகளின் சிறப்பம்சங்கள்: நேரில் கண்டறிய பிளஸ் 2 மாணவா்களுக்கு வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் உயா்கல்வியில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் பிப்.25-ஆம் தேதி அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த நாட்டு நலப் பணித் திட்ட (என்எஸ்எஸ்) அலுவலா்கள், பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் உள்பட 600 பேருக்கு இரு நாள்கள் நடைபெறும் உள்ளுறைப் பயிற்சி (இன்டா்ன்ஷிப்) சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மாநில ஊரக வளா்ச்சி நிறுவனம், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய மூன்று இடங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நிகழாண்டு பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அவா்கள் பகுதியில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன உயா்கல்வி வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும், உயா்கல்விக்கு வழிகாட்டுவது குறித்தும் என்எஸ்எஸ் அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு இரு நாள்கள் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து இந்தப் பயிற்சியில் பங்குபெறும் ஒவ்வொரு என்என்எஸ் அலுவலரும் தங்கள் கல்லூரியில் பயிலும் 30 என்எஸ்எஸ் மாணவா்களை இதற்கென கண்டறிவா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் மாணவா் எண்ணிக்கை ஏற்ப 10 முதல் 15 என்எஸ்எஸ் மாணவா்கள் பள்ளி மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக நியமிக்கப்படுவா். திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 10 மாணவா்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இதன்மூலம் அங்குள்ள உயா்கல்வி வாய்ப்புகள், பட்டப்படிப்புகள், ஆய்வகங்கள், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் பிப்.25-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பெற வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.