தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு சலுகை: ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 16, 2023

தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு சலுகை: ஐகோர்ட் உத்தரவு

தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு சலுகை: ஐகோர்ட் உத்தரவு

நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளருக்கு மகப்பேறு பலன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் உதவிப் பொறியாளராக தற்காலிக அடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி, கருவுற்றிருந்த நிலையில் மகப்பேறு விடுப்பில் சென்றார். அவருக்கு விடுமுறை வழங்கிய போக்குவரத்துக்கழகம் அவர் நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி மகப்பேறு சலுகைகளையும், பலன்களையும் வழங்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து ராஜேஸ்வரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி, பேறு கால பலன்களை நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து போக்குவரத்துக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகப்பேறு என்பது பெண்ணுக்கு மறுபிறப்பு. பிரசவிக்கும் பெண்ணுக்கு 20 எலும்புகள் ஒரே நேரத்தில் உடைவதைப் போன்ற வேதனை ஏற்படும்.

அதை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. கணவன் குடும்பத்துக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் பெண்கள், கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்துக்கழகத்தின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நான்கு வாரங்களில் ராஜேஸ்வரிக்கு மகப்பேறு பலன்களை வழங்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக வசூலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.