நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம் - செய்தி வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 20, 2022

நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம் - செய்தி வெளியீடு!



நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம் - செய்தி வெளியீடு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பொதுமக்களும் அரசும் இணையும் இந்த முன்னெடுப்பு 'நம்ம ஸ்கூல்' திட்டம் என்று அழைக்கப்படுகிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. வேணு சீனிவாசனை தலைவராகவும், செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு.விஸ்வநாதன் ஆனந்தை நல்லெண்ணத் தூதராகவும் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர்.

முன்னாள் மாணவர்கள், உள்ளூர்ச் சமூகம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்கான தளத்தை உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்வை துவக்கி வைத்து பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், “அரசுப் பள்ளிகள் அரசின் சொத்து மட்டுமல்ல, மக்களின் சொத்தும்தான். நமது மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு துணை நிற்பதற்காக ஒன்றிணைய விரும்பும் அனைவருடனும் கைகோர்க்க அரசு விழைகிறது. இம்முயற்சிக்கென பெறப்படும் பங்களிப்பு அனைத்தும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும்" எனத் தெரிவித்தார்.

ஒருங்கிணைத்து வெளிப்படைத்தன்மையையும் நிர்வகிக்க உயர் நம்ம ஸ்கூல்' திட்டத்தில் பெறப்படும் உதவிகள் அனைத்தையும் அலுவலர்களைக் கொண்ட குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளம் மூலம் பள்ளிகளின் தேவைகள் பார்வைக்கு வைக்கப்படும். ஒவ்வொரு பள்ளி குறித்தும் இணையதளத்திலேயே மெய்நிகர் சிற்றுலாவும், 'நிதியுதவிக்கு முன்னும்', நிதியுதவிக்குப் பின்னும்' என தகவல்களை புகைப்படங்களோடு பெறவும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தவும் இந்த இணையதளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியையும் உடன்பயின்ற நண்பர்களையும் தங்களுக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களை தொடர்புகொள்ளவும் இத்திட்டம் உதவும்.

இத்திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் இணையவழியில் எளிதாக வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொடையாளர்கள் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்தபடியே அளித்த நிதி எந்தப் பள்ளியில் எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்ற தகவல்களை அறியும்வண்ணமும் பயனீட்டுச் சான்றிதழை இணையவழியாகவே பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வில் பேசிய திரு. வேணு சீனிவாசன், "நம்மில் பெரும்பாலானோருக்கு, பள்ளி நினைவுகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமான உணர்வை அளிப்பவை. குடும்பத்தாரோடு இருப்பதைப் போலவே பள்ளியுடனான உறவு பின்னிப் பிணைந்ததாக இருக்கும். நமது வேர்களுடன் மீண்டும் இணைவது என்பது உலகமெங்கும் புலம் பெயர்ந்துள்ள நமது தமிழ் மக்களுக்கான ஆழமான உணர்வாகும். நமது பள்ளிகளிடமிருந்து நாம் பெற்றதை நன்றியுடன் திருப்பித் தர, நமது வேர்களை மீண்டும் கண்டறிய நம்ம ஸ்கூல் திட்டம் உதவும்”

நிகழ்ச்சியின்போது, அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு துணைநின்ற உள்ளூர்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மரியாதை செய்து பாராட்டினார். கோயம்புத்தூர் அருகே சூலூரில் தான் பயின்ற அரசுப் பள்ளியை தனது வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தத்தெடுத்து மேம்படுத்திய திரைக் கலைஞர் சிவக்குமார் அவ்வாறு மரியாதை செய்யப்பட்டு பாராட்டப்பட்டவர்களில் ஒருவர்.

திரு. விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றுகையில், "தமிழ்நாட்டின் லட்சியங்களையும் கனவுகளையும் நம் குழந்தைகள் தங்கள் தோள்களில் சுமக்கப் போகிறார்கள். அந்த லட்சியங்களையும் கனவுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் நம்ம ஸ்கூல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நமது அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைவதற்கு ஓர் இணையதளம் உள்ளது. இது வெறும் ஆரம்பம்தான். நம்ம ஸ்கூல் திட்டம் என்ன செய்ய விரும்புகிறதோ அதை அடைய விடாமுயற்சி, வலிமை, ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை. வலுவான அரசுப் பள்ளிகளின் நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நம்ம ஸ்கூலுக்கு உறுதுணையாக இருப்போம்" என தெரிவித்தார்.

நம்ம ஸ்கூல் இணையதளம் அதன் ஒரு பகுதியான பள்ளி மெய்நிகர் சிற்றுலாவும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. மெய்நிகர் சிற்றுலா மூலம் பள்ளிகளின் தேவைகளை நேரில் சென்று பார்த்தது போல அறிந்து கொள்ள இயலும். நிதியாகவோ பொருளாகவோ பங்களிப்பை வழங்கலாம். நன்கொடை அளிப்பவர் தாம் விரும்பும் பள்ளியை தேர்வுசெய்து நன்கொடை அளிக்கலாம் அல்லது அந்தப் பள்ளியை முற்றிலுமாக தத்தெடுக்கலாம்.

நம்ம ஸ்கூல் இணையதளம் : https://nammaschool.tnschools.gov.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.