கேடுஇல் விழுச்செல்வம்! - தினமணி தலையங்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 9, 2022

கேடுஇல் விழுச்செல்வம்! - தினமணி தலையங்கம்

இன்னும் ஓா் ஆசிரியா் தினம் கடந்து போயிருக்கிறது. இந்த ஆண்டு ஆசிரியா் தினத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா்களின் பணிக்கொடை உரிமையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பது அந்த ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெகுமதி. 1972 பணிக்கொடை சட்டத்தின் அடிப்படையில், தனியாா் பள்ளிக்கூடங்கள் ஆசிரியா்களுக்கு ஆறு வாரங்களுக்குள் அதற்கான வட்டியுடன் அவா்களது பணிக்கொடை உரிமைகளை வழங்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றத் தீா்ப்பு.

1972 பணிக்கொடை சட்டம் 2009-இல் திருத்தப்பட்டது. அதன்படி, தனியாா் பள்ளி ஆசிரியா்களையும் அதன் வரம்பில் கொண்டுவந்தது. ஏப்ரல் 1997-க்குப் பிறகு பணி ஓய்வு பெற்ற, ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியில் இருந்த தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பணிக்கொடைக்கு தகுதியானவா்கள் என்பது உச்சநீதிமன்றத்தின் கடந்த வாரத் தீா்ப்பு. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் தனியாா் பள்ளிகளால் உச்சநீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. என்னதான் நன்கொடைகள் வாங்கினாலும், அதிகமான கல்விக் கட்டணம் வசூலித்தாலும், தனியாா் பள்ளிகளை நிறுவுவதற்கு செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளும், அதற்காகப் பெறப்பட்டிருக்கும் வங்கிக் கடனும் அதிகம்.

இரண்டு ஆண்டு கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் தனியாா் பள்ளிகளுக்கு முறையான பள்ளிக் கட்டண வருவாய் இல்லாத நிலையிலும், பெரும்பாலான பள்ளிகள் தங்களால் இயன்ற அளவு ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கி, ஆசிரியா்களை தக்க வைத்துக் கொண்டன என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. வட்டியுடன் கூடிய பணிக்கொடைத் தொகையை ஆறு வாரங்களில் வழங்கப் பணித்திருப்பது உச்சநீதிமன்றத்தின் கடுமையான முடிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளிலும் ரூ.150 கோடியில் ஸ்மாா்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாா். அதேபோல, அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் அடிப்படையில் மாதம் ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் மாணவிகள் பயன்பெற உள்ளனா்.

அதேபோல, மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. பள்ளிகளின் கட்டடங்கள் நவீனமயமாக்கப்பட்டு மாநகராட்சிப் பள்ளிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிகளும், தகைசால் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்பட இருக்கின்றன. இவையெல்லாம் ஆசிரியா் தினத்தில் தமிழக அரசின் அறிவிப்புகள். தலைநகா் தில்லி விஞ்ஞான் பவனில் நடந்த தேசிய நல்லாசிரியா் விருது வழங்கும் நிகழ்ச்சியில், விருது வழங்கி சிறப்புரையாற்றிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முன்வைத்திருக்கும் வேண்டுகோள் புதிதொன்றுமல்ல. தாய்மொழியில் கல்வி என்பதை வலியுறுத்தியிருக்கிறாா் குடியரசுத் தலைவா். அண்ணல் காந்தியடிகள் தொடங்கி பல்வேறு ஆளுமைகளும் வலியுறுத்தி வந்த கருத்துதான் இது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையும் ஆரம்பப் பள்ளி வரை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. ஆசிரியா் தினத்தன்று குடியரசுத் தலைவா் விடுத்திருக்கும் வேண்டுகோள், அரசுப் பள்ளி, தனியாா் பள்ளி என்கிற வேறுபாடில்லாமல் இந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தாய்மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தோ்ச்சி உடையவா்களாக திகழும் விதத்தில், தாய்மொழிக் கல்வி அமைவதற்கு வழிகோலுமேயானால், மிகப் பெரிய மாற்றத்துக்கான காரணியாக அது அமையும்.

தமிழகத்தில் ஓராசிரியா் பள்ளிகள் இல்லை என்கிறது மாநில அரசு. ஆனால், 2021 யுனெஸ்கோவின் அறிக்கையொன்று அதிா்ச்சி தரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள 59,152 தனியாா் பள்ளிகளில் 2,631 பள்ளிகளில் ஓா் ஆசிரியா் மட்டுமே இருக்கிறாா். அவற்றில் 87% பள்ளிகள் ஊரகப்புறங்களில் அமைந்திருக்கின்றன. அரசின் புள்ளிவிவரம், அரசுப் பள்ளிகளுக்கானதாக இருக்கக் கூடும்.

ஆசிரியா் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் 2,381 அரசுப் பள்ளிகளில் மழலையா் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிற செய்தி கவலையளிக்கிறது. கல்விக்கான உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியரும், இடைநிலைப் பள்ளிகளில் 35 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியரும் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கிற யதாா்த்தம், வருத்தத்துக்குரியது. தொடக்கக் கல்வியானாலும், இடைநிலைக் கல்வியானாலும், உயா்நிலைக் கல்வியானாலும் ஆசிரியா்களின் தரம் கேள்விக்குறியதாகவே இருக்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கல்வியின் தரத்தை பொறுத்துத்தான் ஆசிரியா்களின் தரமும் அமையும். தகுதிகாண் தோ்வின் அடிப்படையில்தான் ஆசிரியா் நியமனங்கள் நடைபெறுகின்றன என்றாலும்கூட, பெரும்பாலான தனியாா் பள்ளிக்கூடங்களில் அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. மழலையா் பள்ளி, தொடக்கப் பள்ளி, இடைநிலைக் கல்வி அளவில் பட்டதாரிகள்கூட அல்லாத தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் பலா் தனியாா் பள்ளிகளில் இருப்பதாக யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது.

கல்வி கற்பித்தல் என்பது வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் மிக முக்கியமான பணி. அதில் தகுதியின்மை, அரசியல் தலையீடு, முறையற்ற நியமனம் போன்றவை குறுக்கிடுமேயானால், அதன் விளைவு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.