ஈடுசெய் விடுப்பு வழங்குவதில்கூட சமூக நீதியைப் பின்பற்றாத பள்ளிக் கல்வித்துறை - A school education system that does not follow social justice even in providing compensatory leave - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 27, 2022

ஈடுசெய் விடுப்பு வழங்குவதில்கூட சமூக நீதியைப் பின்பற்றாத பள்ளிக் கல்வித்துறை - A school education system that does not follow social justice even in providing compensatory leave

சமூகநீதி திமுக ஆட்சியில், இ.நி.ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்குவதில்கூட சமூக நீதியைப் பின்பற்றாத பள்ளிக் கல்வித்துறை!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

தமிழ்நாடு அரசு ஆணைகள்,
*62 ப.க.து. நாள்.13.3.2015*
*128 ப.க.து. நாள்.7.5.2010*
*2218 பொ.து நாள் 14.12.1981*
*328 பொ.து நாள் 21.2. 1967*
ஆகியவற்றின் படி *விடுமுறை நாளில் பயிற்சியில் / பணியில் ஈடுபட்ட ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு மட்டும், வழக்கமான பணி நாள்களில் அவர்கள் விரும்பிய தேதியில் ஈடு செய் விடுப்பு* வழங்கப்பட வேண்டும்.

ஆனால், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநர் கையொப்பத்துடன் சமூக வலைதளங்களில் இன்று (27.09.2022) வெளிவந்துள்ள செய்தி அறிக்கையில், அக்டோபர் 6, 7 & 8-ஆம் தேதிகளில் ஈடுசெய் விடுப்பு வழங்குவதாகவும், 10.09.2022 முதல் 6 - 12-ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், *கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்துப் பயிற்சியில் கலந்து கொண்ட 1 - 3 போதிக்கும் இடைநிலை / ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையான அனைத்து தொடக்க - நடுநிலை - உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஈடுசெய் விடுப்பாக* அறிவிக்கப்பட்டுள்ளது.

'எண்ணும் எழுத்தும்' எந்த வகுப்புகளுக்கு மட்டும் நடைமுறையில் உள்ளது என்பதும், எந்தெந்த ஆசிரியர்களுக்கு மட்டும் 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி வழங்கப்பட்டது என்பதும் கல்வித்துறை அதிகாரிகளுக்கே தெரியாதா?

தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஈடுசெய் விடுப்பு துய்க்க அடிப்படையான தகுதி இல்லாத (விடுமுறையில் பணியாற்றாத) ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்கும் விடுப்பு எவ்வகையில் ஈடுசெய்யும் விடுப்பாக இருக்கும்?

விடுமுறையில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்க முடியுமா?

மேலும் மேற்குறிப்பிட்ட அரசாணைகளின் படி, ஈடு செய்யும் விடுப்பைத் துய்ப்போர் மற்றவர்கள் பணியாற்றும் பணி நாளில் தான் துய்க்க இயலும். அப்படியானால், அனைவருக்குமே விடுமுறை (அதாவது பணி நாளே இல்லாத) நாளில் வழங்குவது எந்த விதிகளின் படி ஈடுசெய் விடுப்பாகக் கருதப்படலாம்?

மேற்குறிப்பிட்ட அரசாணைகளின் படி ஈடு செய்யும் விடுப்பு என்பது விடுப்பு துய்க்கத் தகுதியுடைய நபர், தானே விரும்பி எடுப்பது என்பதோடே 6 மாதங்களுக்குள் காலாவதியாகக் கூடிய விடுப்பாகும். இதனை அதிகாரிகள் தாமே முன் வந்து இந்தத் தேதிதான் உனக்கான ஈடுசெய் விடுப்பு; அடுத்த விடுப்பையும் நானே முடிவு செய்வேன் என்பது எந்தவகையான விதிமுறை?

விடுமுறையில் பணியாற்றியோர் & விடுமுறை துய்த்தோர் என அனைவருக்கும் ஈடுசெய் விடுப்பு வழங்குவதுதான் சமூக நீதியா?

சமூகநீதி பேசும் திமுக ஆட்சியில், விடுமுறையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின்படி விடுப்பு அளிப்பதில்கூட சமூகநீதியைப் பின்பற்றாத துறையாகத்தான் பள்ளிக் கல்வித்துறை உள்ளதா?

ஊதியம் & ஓய்வூதியம் சார்ந்த கோரிக்கைகளைத் தீர்த்து வைக்காது முதல்வர் மீது நம்பிக்கை வைத்து மட்டுமே நகரும் ஆசிரிய இயக்கங்கள், ஈடுசெய் விடுப்பு துய்க்கும் உரிமையை இழந்து, விதிகளிலில்லா புதுவித அறிவிப்பால் ஏளனப்படுத்தப்பட்டு மீண்டும் மனவேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்து நீதியை நிலை நாட்டுமா?

ஆசிரிய இயக்கங்கள் கேட்டுக்கொண்டதைக் கருத்தில்வைத்து இப்புதுவித விடுப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . . இதைத்தான் சங்கங்கள் கேட்டனவா?

இல்லை. . . *நியாயமான உரிமையையே கேட்டோம் என்றால். . . இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிரான இந்த சமூக அநீதிக்கு எதிராக தொடக்கக் கல்வித்துறை சங்கங்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன?*

_எதிர்பார்ப்புகளுடன். . .,_
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.