50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 9, 2022

50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களிடம் அரசு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என்று தனியார் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராமச்சந்திரா, ஆதிபராசக்தி, பி.எஸ்.ஜி. உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.

அந்த மனுக்களில், அரசு கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிப்பது சாத்தியமற்றது. அப்படி வசூலித்தால் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தனியார் மருத்துவ கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவின்கீழ் முதலில் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இரு பிரிவு மாணவர்களிடம் இரு வேறு கட்டணம் வசூலிப்பது பாரபட்சமானது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

அரசு 18 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒப்பந்தம் செய்கிறது. அதேபோல், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலித்து தனியார் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது. 50 சதவீத மாணவர்களிடம் 18 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும்.

அதிக வசதிகளுடன் ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கும் போது, அந்த செலவினங்களை கட்டணம் மூலம் தான் சரிகட்ட முடியும் என்றார். வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.