JEE முதல் நிலைத் தேர்வு: கோவை மாணவி தீக் ஷா தமிழகத்தில் முதலிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 13, 2022

JEE முதல் நிலைத் தேர்வு: கோவை மாணவி தீக் ஷா தமிழகத்தில் முதலிடம்

ஜே.இ.இ முதல் நிலைத் தேர்வு முடிவுநேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், தமிழக அளவில் கோவை மாணவி தீக் ஷா முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், இளநிலை தொழில்நுட்பம் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஜே.இ.இ எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இந்த நுழைவுத் தேர்வு முதல் மற்றும் முதன்மை என இருவகைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்ஐடி, ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெரும் தகுதியை பெறுவர்.

முதல்நிலைத் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மைத் தேர்வை எழுதலாம். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும். ஜே.இ.இ முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.

முதல்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வை எழுத நாடு முழுவதும் இருந்து 8.7 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 7.69 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 407 நகரங்களில் 588 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் 14 மாணவர்கள் அதிகபட்சமாக 100 மதிப்பெண்களை முழுமையாகப் பெற்று சாதனைபடைத்துள்ளனர். இந்தத் தேர்வில்,கோவையைச் சேர்ந்த தீக் ஷா திவாகர் என்ற மாணவி, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

அவர் 100-க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கோவையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த தீக் ஷா திவாகர்கூறும்போது, ‘‘இவ்வளவு மதிப்பெண்கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. தேர்வு கடினமாக இருந்தது. ஆனால், நான் படித்த முக்கிய வினாக்களை பார்த்ததும் அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இப்போது அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. இந்தத் தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

அதேபோல், ஜே.இ.இ. இரண்டாம் கட்டத் தேர்வு வரும் 21-ம் தேதிதொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தேர்வு முடிந்த பிறகு முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட முதல்நிலைத் தேர்வுகளி்ல மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட என்.டி.ஏ கொள்கையின் அடிப்படையில் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.