அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 11, 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை அறிக்கை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. அதை சூரப்பாவிற்கு தர இயலாது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, அறிக்கையை வழங்க ஏன் அரசு தயங்குகிறது. வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால்தான் சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பளிக்க முடியும், என்று தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பார்த்திபன், நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு வழங்க உத்தரவிடுகிறோம். வேந்தராகிய ஆளுநருக்கு அறிக்கையை அனுப்பும் முன்பு அதனை சூரப்பாவிற்கு வழங்க வேண்டும்.விசாரணை அறிக்கை மீதான விளக்கத்தை 4 வாரங்களில் தமிழ்நாடு அரசுக்கு சூரப்பா வழங்க வேண்டும், என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.