முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை கடும் எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 10, 2026

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை கடும் எச்சரிக்கை



முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை கடும் எச்சரிக்கை Education Department Issues Stern Warning to Chief Educational Officers

'ஆசிரியர்களுக்கு பணிச்சான்று வழங்க காலதாமதமாகி, அவர்கள் சிறப்பு 'டெட்' தேர்வுக்கு, விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டால், முதன்மை கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும்' என, கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வு எனும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த நடைமுறை, கடந்த 2011 முதல், அமலில் உள்ளது.

இதற்கிடையில், பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்.,1ல் உத்தரவிட்டது. இதனால், தமிழகத்தில் 1.50 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என, தகவல் வெளியானது. ஆசிரியர்களின் நலனுக்காக, சிறப்பு 'டெட்' தேர்வு நடத்திட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி, வரும் ஜூலை 4, 5ம் தேதிகளில், சிறப்பு 'டெட்' தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், நாளை முடிவடைகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பணிச்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். பணிச்சான்று கிடைக்காமல் அல்லது தாமதமாக கிடைக்க பெற்றதால், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பெறுப்பேற்க நேரிடும்.

எனவே, இதில் தனி கவனம் செலுத்தி, காலம் தாழ்த்தாமல், அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.